வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தந்தையான டி.ஏ.ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.
அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள போராட்ட களத்துக்குள் நேற்று முன்தினம் (மே 9) புகுந்த மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தகவல் பரவி, மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து, இலங்கை முழுதும் காட்டுத்தீ போல கலவரம் வெடித்தது.
இந்த கலவரங்களில், ஆளுங்கட்சி எம்.பி., அமரகீர்த்தி உட்பட எட்டு பேர் பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையின் அம்பந்தோட்டையில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பூர்வீக இல்லத்துக்கு மக்கள் தீ வைத்தனர். மேலும், தங்காலையில் உள்ள ராஜபக்சே சகோதர்களின் தந்தை டி.ஏ.ராஜபக்சே சிலையை போராட்டக்காரர்கள் உடைத்து நொறுக்கினர்.
Advertisement