87வது வயதில் 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி – மாஜி முதல்வருக்கு குவியும் வாழ்த்து!

ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 87வது வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி அடைந்துள்ளார்.

ஹரியானா மாநில முதலமைச்சராக, கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா பதவி வகித்தார். அப்போது, ஆசிரியர்கள் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில், டெல்லி நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, ஓம் பிரகாஷ் சவுதாலா 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இதற்கிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம் தண்டனை முடிந்து, ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையிலிருந்து வெளியே வந்தார். ஹரியானா திறந்த நிலை கல்வி வாரியம் வாயிலாக அவர், 12 ஆம் வகுப்பு தேர்வையும் எழுதினார். ஆனால், 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததால், அவருடைய, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வையும் தனியாக எழுதி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில், ஓம் பிரகாஷ் சவுதாலா தேர்ச்சி பெற்றுள்ளார். இதை அடுத்து, சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று தனது பொதுத் தேர்வுக்கான மார்க் ஷீட்டை பெற்றுக் கொண்டார்.

10 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 88 மதிப்பெண் அவர் எடுத்துள்ளார். தேர்ச்சி பெற்ற முன்னாள் முதலமைச்சருக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், நிர்மத் கவுர் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 87 வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.