“இலங்கை நமக்கு நண்பர், அதனால் எப்போதும் அவர்களுக்கு சிறப்பான உதவிகள் செய்வோம்” என மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கலந்து கொண்டு, ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மூத்த குடிமக்களுக்கான புதிய வைப்பு கடன் திட்டம், தாயகம் திரும்பியோருக்கான தல அறக்கட்டளை மூலம் இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டம், மைக்ரோ ஃபைனான்ஸ் கீழ் புதிய கடன் திட்டம் மற்றும் ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட்-க்கான (RMRL) புதிய மொபைல் செயலி போன்ற திட்டங்களை மத்திய இணை அமைச்சர், அஜய் குமார் மிஸ்ரா துவங்கி வைத்தார்.
அதன் பின்னர் பேசிய அவர், “1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்காக சிறந்த சேவையாற்றி வருகிறது. 5,000 ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வைப்புத்தொகை வைத்துக் கொள்ளும் வாய்ப்பை, ரெப்கோ வங்கி வழங்குவதன் மூலம், மூத்த குடிமக்கள் பலர் பயனடைய உள்ளனர். ரெப்கோ வங்கிக்கு ஆர்பிஐ அனுமதி வாங்கி கொடுக்க வேண்டும் என முயற்சித்து வருகிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அமைச்சர் என்ற முறையில் நான் எடுப்பேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா தன்னிகரின்றி வளர்ந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் அவசியம். பெண்களுக்கான திட்டங்கள் கடன்கள் அதிக அளவில் வங்கிகளில் வழங்கப்படுகின்றது” என்று பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, “நாங்கள் இலங்கைக்கு உதவுகிறோம். அவர்கள் எங்கள் நண்பர்கள். நம்மால் முடிந்த சிறப்பான உதவியை அவர்களுக்கு எப்போதும் செய்வோம். ராஜீவ் காந்தி வழக்கு நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறுகிறது. குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM