கடலூர் மாவட்டத்தில் காதல் கணவரின் வீட்டில் கழிவறை இல்லாததால், திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
கடலூரைச் சேர்ந்த கார்த்திகேயனும் அரிசி பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரம்யாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் காதலை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஆறாம் தேதி, இந்த காதல் ஜோடி மணவாழ்க்கையில் இணைந்தது. திருமணத்துக்குப் பின் கணவர் வீட்டுக்குச் சென்ற ரம்யாவுக்கு அங்கு கழிவறை இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்துள்ளது. கழிவறை இருக்கும் வீடாக பார்க்குமாறு கார்த்திகேயனிடம் ரம்யா கேட்டு வந்ததால், புதுமணத் தம்பதிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரம்யா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். துடிதுடித்த நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர்,
கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரம்யா மரணம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறார்.
இந்தியாவில் கழிப்பறை வசதி இல்லாதோர் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகாரில் 44 சதவீதமும், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிராவில் 20 சதவீதமும், கேரளா, மணிப்பூர், மிசோரம், உத்தராகண்ட், நாகாலாந்து, சிக்கிமில் 1 சதவீதமும் டெல்லி, லட்சத்தீவுகள் 0 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் முறையான கழிப்பறையை பயன்படுத்தாதோர் 27 சதவீதமும், கிராமப் பகுதிகளில் கழிப்பறை இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை 37.2 %, நகரங்களில் கழிப்பறை இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை 15%, சென்னை, கோவை உட்பட 6 மாவட்டங்களில் பெரும்பாலும் அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி உள்ளது. 25 மாவட்டங்களில் சரியான கழிப்பறை வசதி இல்லை. 2,400 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM