“எனக்கு என்னாச்சுனே தெரியல..!" – மரண வதந்திகளுக்கு நித்தியானந்தா விளக்கம்!

சர்ச்சை வீடியோவில் தொடங்கி மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது வரை, சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் தன்னை போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென்பசபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே, தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலமாக சொற்பொழிவு ஆற்றி வந்தார் நித்தியானந்தா. இந்தச் சூழலில், அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே ‘ஷூட்’ செய்த வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் புது தகவல் கிளம்பியது. இதுதொடர்பாக, இன்று விளக்கமளித்திருக்கிறார் நித்தியானந்தா.

நித்தியானந்தா விளக்கம்

அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், “27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்” என்றிருக்கிறார்.

இந்த விளக்கத்தை அளித்தக் கையோடு, இன்று மே 11-ம் தேதியை எழுதி, ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று தான் எழுதிய குறிப்பையும் வெளியிட்டிருக்கிறார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து, பெங்களூருவிலுள்ள அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். “இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு தென் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள நாடு ஒன்றில்தான் நித்தியானந்தா முதலில் தஞ்சமடைந்தார். சில ராஜாங்க இடர்பாடுகளால், அந்த நாட்டில் அவர் தொடர்ச்சியாக தங்க முடியவில்லை. கடல் மார்க்கமாக, தென் பசபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றிற்கு கப்பலில் பயணமானார். இதற்கு முன்னர், அவர் நீண்ட நாள்கள் கடலில் பயணித்தில்லை. இதனால், அவருக்கு உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. நூற்றுக்கணக்கான சிஷ்யர்கள் முன்னிலையிலேயே பேசி பழக்கப்பட்டவர் நித்தியானந்தா. தன் ஆசிரமத்தில் கொண்டாட்ட விழாக்களை தினந்தோறும் நடத்தியவர். புதிதாக குடியேறிய தீவில், அவருக்கு அப்படியான சந்தோஷம் தரும் எந்த விஷயங்களும் இல்லை. அறையைவிட்டு வேறு எங்கேயும் செல்ல முடியாததால், ‘கேமரா, க்ரீன் மேட்’ தொழில்நுட்பத்தோடு மட்டுமே அவர் இருக்க வேண்டியதாகிவிட்டது.

நித்தியானந்தா

ஓரிரு நபர்கள் மட்டும் முன்னாள் நிற்க, நெடுநேரம் கேமராக்களை மட்டும் பார்த்தபடி, யூ டியூப் தளத்தில் போதனைகள் வழங்கும் நடைமுறை அவரை சலிப்புர செய்துவிட்டது. ‘நான் ஒரு நாட்டின் அதிபர். எல்லோரும் என் நாட்டிற்கு வாருங்கள்…’ என அவ்வப்போது பேசி தன் மனதை சாந்தப்படுத்திக் கொண்டாலும், இந்தியாவிலிருந்து வெளியேறியதை இன்னமும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால், அவர் தன்னை காயப்படுத்திக் கொள்வதற்கும், மனப் பிறழ்வால் பாதிப்படையவும் வாய்ப்பிருக்கிறது. திருவண்ணாமலைக்கு வந்தால் மட்டுமே அவரது மனம் நிம்மதியடையும். அவருக்கு 44 வயதாகிறது. சுகர், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளும் அவருக்கு இருக்கின்றன. அவரது ஆன்மிகப் பயணம் தொடர வேண்டுமென்பதே அவரது ஆதரவாளர்களான எங்களின் விருப்பம். இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு, மனிதாபிமான அடிப்படையில் அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றனர்.

தமிழகத்தில் மதம் ரீதியாக எந்த நிகழ்வு, சர்ச்சைகள் எழுந்தாலும் அதில் தன் கருத்தை சூட்டோடு பதிய வைப்பவர் நித்தியானந்தா. ஆனால், உடல் நலிவுற்று சோர்ந்த கண்களுடன் அவர் போட்டோக்களை வெளியிட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து, உரிய சிகிச்சைகளை அளித்து, வழக்குகளை நேர்மையாக நடத்த வேண்டுமென்பதே அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.