பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்…. அல்-ஜசீரா நிருபர் தலையில் குண்டு பாய்ந்து பலி…

மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற மோதலில் அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபரின் தலையில் குண்டு பாய்ந்து பலியானார்.

உலகின் வல்லமை பொருந்திய ஆயுதங்களையும் ராணுவத்தையும் வைத்திருப்பதாகக் கூறப்படும் இஸ்ரேல் தன்னாட்சி பகுதியாக உள்ள பாலஸ்தீன பகுதிக்குள் பல ஆண்டுகளாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்குமான இந்த மோதல் சில நேரங்களில் பெரிய அளவிலான தாக்குதலும் நடத்தப்படும்.

அல்-ஜசீரா மூத்த பத்திரிகையாளர் ஷிரீன் அபு அஃலே

பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மேற்கு கரையில் இன்று நடைபெற்ற தாக்குதலில் அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஷிரீன் அபு அஃலே தலையில் குண்டு பாய்ந்து கொல்லப்பட்டார்.

பாலஸ்தீனியர்களின் தாக்குதலில் அந்த பெண் நிருபர் உயிரிழந்ததாக கூறிய இஸ்ரேல் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கூறியது.

தாக்குதலின் போது ஷிரீன் அபு அஃலே-வுடன் இருந்த மற்றொரு நிருபர் அலி சமௌதி மீது குண்டு பாய்ந்து காயமடைந்தார். தீவிர சிகிச்சையில் உள்ள அலி சமௌதி “இஸ்ரேலிய ராணுவத்தினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். பாலஸ்தீனர்கள் யாரும் மோதலில் ஈடுபடவில்லை” என்று உறுதிபட கூறினார்.

மேலும், அங்கிருந்த உள்ளூர் நிருபர்களும் பாலஸ்தீனியர்கள் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்தனர். தவிர, நிருபர்களுக்கான மேல்சட்டை அணிந்திருந்த போதும் இஸ்ரேல் ராணுவத்தினர் எந்தவித எச்சரிக்கையும் இன்று தாக்குதல் நடத்தியதாக கூறினர்.

பாலஸ்தீன-அமெரிக்கரான நிருபர் ஷிரீன் அபு அஃலே 1997 ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளாக அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் பணியில் உள்ளார். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் அவர் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.