புதுடெல்லி: தேசத் துரோக சட்டத்தின் 124ஏ பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசால், தேசத்துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
செவ்வாய்கிழமை நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 124-ஏ விதிகளை மறுஆய்வு செய்யவும், மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசு விரும்புகிறது. இதுதொடர்பான வழக்குகளில் முடிவெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. சட்ட விதிகளில் மறுஆய்வு, மறுபரிசீலனை செய்வதற்கு கால அவகாசத்தையும் வழங்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை (இன்று) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 124ஏ சட்டப்பிரிவு தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், தேசத் துரோக சட்டத்தின் 124ஏ பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டனர். தேசத்துரோக சட்டப்பிரிவு குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை அந்த பிரிவின் கீழ் வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி, இடைப்பட்ட காலத்தில் அந்த சட்டத்தின் கீழ் யார் மீதாவது வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்திய தண்டனை சட்டத்தில் 124ஏ பிரிவு தேசத் துரோகத்தை வரையறுக்கிறது. நாட்டில் நடைமுறையில் உள்ள இந்திய குற்றவியல் சட்டம் 124ஏ-வானது நாட்டுக்கு தேசத் துரோகம் இழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தேசத்துரோக சட்டப் பிரிவு 124ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது. இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.