தேசத்துரோக வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசத்துரோகக் குற்றச்சாட்டின்கீழ் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிறுத்தி வைக்குமாறும், புதிதாக எந்த வழக்கும் பதியக்கூடாதென்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அந்த சட்டப்பிரிவு பரிசீலனையில் இருப்பதால், `மாநில மற்றும் மத்திய அரசுகள் IPC-யின் 124-A பிரிவை செயல்படுத்தவோ, அந்தப் பிரிவின்கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ, எந்த விசாரணையையும் தொடரவோ அல்லது அடக்குமுறை நடவடிக்கைகளை எடுக்கவோ மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்’ என அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் இ.பி.கோ 124-A பிரிவைப் பயன்படுத்தி பொதுமக்களை கொடுமைப்படுத்திய அரசாக கடந்த அ.தி.மு.க அரசு இருந்தது. தி.மு.க தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும், 2021 ஜூன் மாதம் 3-ம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இதுகுறித்துக் கடிதம் ஒன்றை எழுதினேன். `கடந்த 10 ஆண்டுகளில் 124-ஏ பிரிவின்கீழ் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும்’ என அதில் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எனது வேண்டுகோளின் நியாயத்தை இன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஐ.பி.சி பிரிவு 124-A இன் கீழ் தமிழ்நாடு அரசு இனி எவர்மீதும் வழக்கு பதிவு செய்யாது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொள்கை அறிவிப்பாக வெளியிட்டு, இந்தியாவில் உள்ள பிற மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.