புதுடெல்லி: ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் பான் எண், ஆதார் எண் கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு நிதியாண்டில் வங்கிகளில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ அல்லது நடப்புக் கணக்கைத் தொடங்கவோ, நிரந்தர கணக்கு எண் அல்லது பயோமெட்ரிக் ஆதாரை வழங்குவது கட்டாயம்,’ என கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஏகேஎம் குளோபல் டேக்ஸ் பார்ட்னர் சந்தீப் செகல், ‘‘இது நிதி பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும். டெபாசிட் மற்றும் பணம் எடுப்பதற்கும் கூட பான் எண்ணை பெறுவதற்கான கட்டாய நிபந்தனை, பண பரிவர்த்தனை குறித்த தகவலை கண்டறிய அரசாங்கத்திற்கு உதவும்,’’ என்றார்.