இலங்கையில் விரைவில் புதிய பிரதமர் – அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதுவும் எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், கோபாவேசமும் மேலும் வலுத்தது.

இந்த நிலையில், இதுவரையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி வந்த மகிந்த ராஜபக்சே, நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து பதவி விலகினார். 
அதேநேரத்தில், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினர். 
இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். 217 பேர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கி இருப்பதாக கூறுகிறது. இப்படி தொடர்ந்து பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ள இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்து உள்ளார்.  
இலங்கையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரவையும் உருவாக்கப்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “நான் இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட, அதேபோன்று, நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதன்பின்னர், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் விதத்திலான 19வது திருத்தம் அமல்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன்.
புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய திட்டத்தை முன்வைத்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன். அதேபோன்று, பல்வேறு தரப்புக்களினால் ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் புதிய அரசாங்கம், நாட்டை ஸ்திரதன்மைக்கு கொண்டு வந்ததன் பின்னர் அனைத்து தரப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பேன்.
பொதுமக்களின் உயிர்களுக்கான பாதுகாப்பை போன்று, அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அரச பொறிமுறையொன்றை தொடர்ச்சியான நடைமுறைப்படுத்துவதற்கு எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்” என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.