ஜபோரிஜியா:ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய்கள் வாயிலாக செல்லும் இயற்கை எரிவாயு வினியோகத்தை உக்ரைன் நிறுத்தி உள்ளது, ரஷ்யாவை ஆத்திரமடைய வைத்துள்ளது.
பிப்ரவரி 24ம் தேதி முதல் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.முதலில் கீவ் உள்ளிட்ட பிரதான நகரங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படையினர் தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. எனினும், அங்கு உக்ரைன் ராணுவத்தின் வசம் உள்ள அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியை மட்டும், கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நிலத்தடி குழாய்கள் வாயிலாக செல்லும் இயற்கை எரிவாயு வினியோகத்தை, உக்ரைன் நிறுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை, ரஷ்யாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. இதனால், வரும் நாட்களில், ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
.முதல் அதிபர் காலமானார்
உக்ரைன் சுதந்திரம் அடைந்ததற்கு முக்கிய காரணமானவரும், நாட்டின் முதல் அதிபருமான லியோனிட் கிராவ்சக் காலமானார். அவருக்கு வயது, 88. இந்த தகவலை, அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஆண்டிரி எர்மேக் நேற்று உறுதிபடுத்தினார். எனினும், அவரின் மரணத்திற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிராவ்சக், கடந்த ஆண்டு, இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement