சென்னை: இ-சேவை 2.0 என்ற திட்டம் மூலம் புதிதாக 194 சேவைகளை அறிமுகப்படுத்த தமிழக தகவல் தொழில் துட்ப துறையின் கீழ் உள்ள மின் ஆளுமை முகமை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் உள்ள 580 மையங்கள் உட்பட பல்வேறு முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய்த் துறையின் கீழ் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட 40 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல சமூக நலன், மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 22 துறைகளின் 130-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 6.70 கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள் (அதாவது சேவைகள்) இ-சேவை மூலம் நடந்துள்ளன. ‘
இந்நிலையில் தமிழகத்தில் இ-சேவை 2.0 விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “இ-சேவை 2.0 என்ற திட்டம் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கு என்று தனியாக ஒரு செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு செய்து அதன்மூலம் பலமுறை சேவைகளை பெற முடியும். குறுந்தகவல் மூலம் சேவை விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த திட்டத்தில் புதிதாக 194 சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்ப துறை முடிவு செய்துள்ளது. இதன்படி மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குனரகம், வருவாய் நிர்வாக துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, தீயணைப்பு துறை, அண்ணா பல்கலைக்கழகம், பொது வினியோகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, கால்நடை துறை, சென்னை போக்குவரத்து காவல், கைத்தறி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகர்புற வளர்ச்சி துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை, நீர்வளத் துறை, தொழிலாளர்கள் நல வாரியங்கள், சிவில் சப்ளை துறை, பொதுப் பணித்துறை, பள்ளிக் கல்வி துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பான சேவைகள் புதிதாக இதன் மூல வழங்கப்படவுள்ளது.