வாஷிங்டன், :அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருபவர் ஜிம் கிட்சென், 57, வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் அதிக விருப்பமுடைய இவர், ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்ட, 193 நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
இவர், 1.6 கோடி கி.மீ., துாரம் வரை, விமான பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பெரும்பாலான பயணங்களுக்கு, ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானங்களை பயன்படுத்தி உள்ளார். இந்த ஏர்லைன்ஸ் விமானங்களில் மட்டும், 48 லட்சம் கி.மீ., துாரம் பயணித்துள்ளார்.
இவர், விண்வெளியையும் விட்டுவைக்கவில்லை. ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோசின், ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்தின், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் வாயிலாக, கடந்த மார்ச்சில், ஜிம் கிட்சென் விண்வெளிக்கு பயணித்துள்ளார். இவருடன், பிரபல அமெரிக்க நகைச்சுவை நடிகர் பீட் டேவிட்சனும் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன் பயணங்கள் குறித்து ஜிம் கூறுகையில், “உலகில், 193 நாடுகளுக்கு பயணித்துள்ள ஒரே நபர் நான் தான். எனக்கு, எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பது பிடிக்கும். எனினும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் அதிகமாக பயணித்துள்ளேன்,” என்றார்.
Advertisement