கவுகாத்தி: அமித்ஷாவை பிரதமர் என்றும், மோடியை உள்துறை அமைச்சர் என்றும் அசாம் முதல்வர் தவறுதலாக குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தில் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி கவுகாத்தியில் பாஜ பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், ‘பிரதமர் அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர் மோடி, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,’ என்று குறிப்பிட்டார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவரை பிரதமர் என்றும், மோடியை உள்துறை அமைச்சர் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சுமார் 15 நொடிகள் ஓடும் இந்த வீடியோ குறித்து காங்கிரஸ், அசாம் ஜாதிய பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி பதிவிடுகையில், ‘பாஜவின் மூத்த 2 தலைவர்களின் பதவியை முதல்வர் தவறாக குறிப்பிட்டதில் உள்நோக்கங்கள் இருக்கின்றன. அமித்ஷாவை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதற்கான பிரசாரமாக இது முன்னெடுக்கப்படுகிறதா? சர்பானந்தா சோனோவால் முதல்வராக இருந்தபோது ஹிமந்தா அமைச்சராக இருந்தார். அப்போது பாஜ எம்பி பல்லப் லோச்சன் தாஸ் ஹிமந்தாவை முதல்வர் என்று குறிப்பிட்டு பேசினார். கடைசியில் சர்பானந்தா மாற்றப்பட்டு ஹிமந்தா முதல்வராக நியமிக்கப்பட்டார்,’ என்று தெரிவித்துள்ளது.