பெங்களூரு, ”சர்க்கரை ஆலை நிறுவனங்கள் பாக்கி வைத்திருந்த 954 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என சர்க்கரை துறை அமைச்சர் சங்கர் பாட்டீல் முனேனகொப்பா தெரிவித்தார்.விவசாயிகளிடம் கரும்பு வாங்கி, உரிய நேரத்தில் பணம் தரவில்லை என்று சர்க்கரை ஆலை நிறுவனங்கள் மீது, விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், நிர்வாக இயக்குனர்கள், முக்கியஸ்தர்களுடன், சர்க்கரை துறை அமைச்சர் சங்கர் பாட்டீல் முனேனகொப்பா, பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.பின், அவர் கூறியதாவது:ஏப்ரல் 15 வரை, விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 2,389.94 கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டியிருந்தது. உடனடியாக பாக்கி பணத்தை வழங்கும்படி சர்க்கரை துறை கமிஷனர், ஆலை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.இதனால், ஏப்ரல் 30க்குள் 954 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதி, 1,435.94 கோடி ரூபாயை விரைவில் வழங்குவதாக உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.கரும்பு மூலம் எத்தனால் உற்பத்தி செய்வதற்கு தனி கொள்கை தயாரிக்க உள்ளோம். இதற்காக நிபுணர்கள் குழு, உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ளது. மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில், மற்றொரு குழுவை பிரேசில் நாட்டுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும்.இரண்டு குழுக்களும் அறிக்கை தந்த பின், பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு கர்நாடகாவில் 32 சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் 68 ஆலைகள் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதி பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement