இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன?! – விரிவான அலசல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிகழ்ந்துவரும் அசாதாரண சூழ்நிலைகளைப் பற்றி முன்னுரை அளிக்கத் தேவையில்லை; அரசுக்கு எதிராகவும், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகவேண்டும் எனக்கோரியும் கடந்த ஒருமாத காலமாக அமைதிவழியில் போராடிவந்த மக்களை, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கினர். ராஜபக்சே பதவி விலகியதையடுத்து ஆத்திரமடைந்த அவரின் ஆதரவாளர்கள், ராஜபக்சேவின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கள்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக போராட்டகள மக்கள், ராஜபக்சே, அவரின் ஆதரளவாளர்கள், குடும்பத்தினர்கள், அரசாங்க அமைச்சர்களின் வீடுகளை தீக்கிரையாக்கினர்.

ராஜபக்சே ராஜினாமா

இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் கொழும்பு அரச மாளிகை, வீடுகளை விட்டுவிட்டு, தமிழ்ப் பகுதியில் இருக்கும் திரிகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கும் உத்தரவு வழங்கியிருக்கிறது. இதனால் இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் கருத்துக்களைக் கேட்டோம்!

செந்தில் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்:

“கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றபோது இலங்கையின் அந்நிய செலவாணி கையிருப்பு 7.5 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது 2.5 மில்லியனுக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதற்கு முழு பொறுப்பும் கோத்தபய ராஜபக்சேவின் தவறான நிர்வாகம் தான்! தேர்தலில் போட்டியிடாதவர்களை அமைச்சர்களாகவும், ராணுவ அதிகாரிகளை கவர்னர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், போன்ற அரசின் நிர்வாகம் சார்ந்த பதவிகளில் தன்னிச்சையாக பணியமர்த்தியதும்தான் முதன்மைக் காரணம். இப்படி நிர்வாகத் திறனற்ற, அனுபவமற்றவர்களை அரசின் முக்கியமானத் துறைகளில் உயர் அதிகாரிகளாக நியமித்து, அவர்களின் அனுபவமற்ற செயல்பாடுகளினால் இலங்கைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது; இவற்றை பொதுமக்கள், ஏனைய கட்சிகள் சுட்டிக்காட்டியபோதும் அதை திருத்திக்கொள்ள கோத்தபய அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

செந்தில் தொண்டமான்

இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகவேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையில், இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொண்டு தாமாகவே முன்வந்து இருவரும் பதவி விலகிருக்க வேண்டும். ஆனால், இப்போது பிரதமர் மிகிந்த ராஜபக்சே மட்டும்தான் பதவி விலகியிருக்கிறார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும்! அப்போதுதான் மக்களின் கோபம் தணியும். மீண்டும் கோத்தபய ராஜபக்சே பதவியில் தொடர்ந்தால் இலங்கையின் நிலை இன்னமும் இப்படியேத்தான் இருக்கும். ஒருவேளை கோத்தபய பதவி விலகினால் அந்த இடத்திற்கு Parliament speaker இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். அது இல்லாதபட்சத்தில் Chief Justice அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டை நிர்வகிக்கலாம்! அதன்பிறகு புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். எப்படிப் பார்த்தாலும் இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்ப சில ஆண்டுகளாவது ஆகும்!”

நிலாந்தன், ஈழ எழுத்தாளர்:

“இப்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாகவும், அரசியல் நெருக்கடி யாப்பு (அரசியலமைப்பு சட்டம்) நெருக்கடியாகவும் மாறியிருக்கிறது. எனவே, அரசியல் யாப்புக்குள் இருந்து தீர்வைக் காண்பது கடினம். யாப்பின்படி ஜனாதிபதிக்கே அதிக அதிகாரம் இருக்கிறது. அவரைப் பதவியிலிருந்து அகற்றுவது கடினம். மேலும், யாப்பின்படி ஒரு தேர்தலை நடத்துவதற்கு இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆனால், அதுவரை விலை உயர்வு பொறுத்திருக்காது, பொருளாதார நெருக்கடியும் காத்திருக்காது! எனவே, இப்போதைய தேவையாக இருப்பது யாப்புக்கு வெளியே சென்று, துணிச்சலான, இடைக்கால ஏற்பாடு ஒன்றைப் பற்றி சிந்திப்பதுதான்! அப்படி சிந்திக்கவேண்டுமென்றால், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த இடத்தில் பலமாக இல்லை!

நிலாந்தன்

அவர்கள் இரண்டு காரணங்களுக்காக, அரசாங்கத்தோடு இணைந்து ஒரு இடைக்கால ஏற்பட்டுக்குப்போக தயாராக இல்லை; முதலாவது காரணம் அவர்கள் மத்தியில் வலுவானத் தலைமை இல்லை; இரண்டாவது காரணம் இந்த அரசாங்கத்தின் தோல்வியைப் பங்கிட அவர்கள் தயாராக இல்லை; தயங்குகிறார்கள்! எனவே, ஒரு இடைக்கால ஏற்பாடு உருவாகாதவரை, அரசியல் ஸ்திரத்தன்மை வராது. அரசியல் ஸ்திரத்தன்மை வராமல் உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற வெளி ஸ்தாபங்களின் உதவிகள் வராது. இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் `Saline’ போன்றவை. அவை மூச்சுவிடும் அவகாசத்தைத்தான் கொடுக்கும். அவை தற்காலிகமாக மின்வெட்டை குறைக்கும், விலைவாசி உயர்வை ஒப்பீட்டளவில் தடுக்கும்; ஆனால் அவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல! ஆகவே, யாப்புக்கு வெளியே ஒரு இடைக்கால ஏற்பாட்டை செய்து அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரவேண்டும்!” எனக் கூறினார்.

லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்:

“முதலாவதாக, இலங்கை அரசமைப்பில் சர்வ அதிகாரமும் கொண்டிருக்கக்கூடிய அதிபர் முதலில் பதவி விலக வேண்டும். முக்கியமாக, அதிபராக இருக்கும் கோத்தபய பதவி விலகும் முன்னதாக மறுதேர்தலுக்கான ஒப்புதலை ஏற்படுத்திவிட்டுதான் பதவி விலகவேண்டும். இரண்டாவதாக, கடன் சிக்கலைத் தீர்க்கவேண்டும். இப்போதுள்ள கடன்சுமையை அடைப்பதற்காக எல்லா நாடுகளிடமும் வரைமுறையில்லாமல் கடன்வாங்கி, அதற்கு வட்டி கட்டி மேளும் கடன்சுமை அதிகரிக்க வழிசெய்யாமல், வட்டியில்லாக் கடன்களை வாங்க முயற்சி செய்யவேண்டும். மூன்றாவதாக, (விவசாயம் போன்றவற்றில்) சுய உற்பத்தியைப் பெருக்கவேண்டும். இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் போனாலும் கூட, மக்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் செல்லவிடாமல், குறைந்தபட்சம் அடிப்படை உணவுத் தேவையையாவது பூர்த்திசெய்யும். அதேபோல இலங்கையில் நிரம்ப இருக்கும் இரத்தின வளங்கள், மீன் வளங்கள், தேயிலை போன்றவற்றை உள்நாட்டுத் தேவைபோக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்டவேண்டும்.

இலங்கை

நான்காவதாக, எம்.பிக்கள், அமைச்சர்களுக்கு பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆடம்பர சொகுசு வாகனங்கள், சொத்துக்கள், சலுகைகள் வழங்குவதை நிறுத்தவேண்டும். அப்படிக்கொடுத்தாலும் பதவியைவிட்டு அவர்கள் இறங்கியபின்னர் அவற்றை மீண்டும் அரசு திரும்பப்பெறவெண்டும். ஊழல் செய்யாத வகையிலும், அரசாங்கப் பணத்தை வீண்விரயம் செய்யாத வகையிலும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கென்று தனி ஒழுங்குமுறை சட்டம் இயற்றவேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐந்தாவதாக, மிக முக்கியமாக இலங்கையின் பிரதான உள்நாட்டுப் பிரச்னையாக விளங்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை வழங்க வேண்டும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.