ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: வங்கிகளில் இருந்து ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு  உள்ளது.

மத்தியஅரசு டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் வங்கி சேவைகளை பொதுமக்கள் உபயோகப்படுத்த வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில் ஏராளமான கட்டுப் பாடுகளையும் விதித்து, ஒவ்வொரு சேவைக்கும் வரி, சேவை கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தையும் பிடுங்கி வருகிறது. ஏற்கனவே,  ஆதார், பான் கார்டு இணைப்பு, வங்கி கணக்குடன் பான் கார்டு, ஆதார் கார்டு இணைப்பு என பொதுமக்களின் அனைத்து சேவைகளையும் கண்காணித்து வரும் மத்தியஅரசு,  வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்களில் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 5 முறை இலவசமாகப் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல, மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுப்பதாக இருந்தால் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரா அல்லாத மையங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்தால் சேவை கட்டணம்  வசூலித்து வருகிறது.

இந்த நிலையில், வங்கிகளில் இருந்து ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு  உள்ளது.

இதுதொடர்பாக மத்தியஅரசின் நேரடி வரிகள் வாரியம்  வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு நிதியாண்டில் வங்கிகளில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ அல்லது நடப்புக் கணக்கைத் தொடங்கவோ, நிரந்தர கணக்கு எண்  அல்லது பயோமெட்ரிக் ஆதாரை வழங்குவது  கட்டாயம்,’ என கூறியுள்ளது.

பான் அட்டையை வைத்திருக்காத நபர்களை வரி வலையின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தனது வரி செலுத்துவோர் தளத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் தொடர் நடவடிக்கையே இந்த அறிவிப்பு.

இது குறித்து கருத்து தெரிவித்த ஏகேஎம் குளோபல் டேக்ஸ் பார்ட்னர் சந்தீப் செகல், ‘‘இது நிதி பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும். டெபாசிட் மற்றும் பணம் எடுப்பதற்கும் கூட பான்  எண்ணை பெறுவதற்கான கட்டாய நிபந்தனை,  பண பரிவர்த்தனை குறித்த தகவலை கண்டறிய அரசாங்கத்திற்கு உதவும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.