கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. பரபரப்பான அரசியல்வாதியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கமலைப் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆரவாரமாக இந்தப் பாடலில் கமல் தோன்றியிருக்கிறார். ‘பத்தல பத்தல’ எனத் தொடங்குகிற பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனே எழுதி பாடவும் செய்திருக்கிறார். அதனுடைய வரிகள் தான் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி வருகின்றன.
ஜாலியான பாடல் அதுவும் கமல் குரலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்திருக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் `நீ எத்தினி குடிச்சாலும் இங்கு பட்டினி கூடாதே‘ என டாஸ்மாக் எதிர்ப்பாக பொதுநலன் பேசுகிற இடம் வருகிறது. நடுவில் வரும் ‘கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..’ என்கிற வரிகள், கஜா புயலின் போது மக்களின் நிவாரணத்துக்கு முன்வராத அரசை லெப்ட்ல ஒரு அடி என விமர்சித்து கமல் எழுதியிருப்பதாக ரசிகர்கள் பாடல் வரிகளை டீ-கோட் செய்து வருகிறார்கள்.
இதற்கு பிறகு தான் முக்கியமான வரிகளே வருகின்றன. ‘ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே… சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..’ நேரடியாகவே ஒன்றியம் எனக் குறிப்பிட்டுவிட்டார் கமல்ஹாசன். இரண்டாவது வரி தான் யாரைச் சொல்கிறார் என புரியல… குழம்பியவாறு பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
கமல்ஹாசன் நடித்து 1986-ல் வெளியான விக்ரம் படத்தின் பெயரையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படத்திற்கும் தேர்தெடுத்துள்ளார்கள். படம் ஜூன் 3 திரையில் வெளியாகிறது. கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி காம்போவுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்.