புதுடெல்லி: மேற்கு ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில், ஐ.நா. சார்பில் பாலைவனமயமாதலை தடுப்பது தொடர்பான கருத்தரங்கின் 15-வது அமர்வு (காப் 15) கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் பேசியதாவது:
இந்தியாவில் சீர்கேடு அடைந்துள்ள 2.6 கோடி ஹெக்டேர் நிலங்களை வரும் 2030-ம் ஆண்டுக்குள் சீரமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, மண் வளத்தை கண்காணிக்க விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 2015-19 காலகட்டத்தில் ரசாயன உரம் பயன்படுத்துவது 8 முதல் 10 சதவீதம் குறைந்துள்ளது.
பூமியில் உள்ள 40 சதவீத நிலம் சீர்கெட்டுள்ளதாகவும் இதனால் 50 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் சுமார் 50 சதவீத சர்வதேச ஜிடிபிக்கு (44 லட்சம் கோடி டாலர்) அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களையும் பூமியையும் பாதுகாக்க வேண்டுமானால் வளர்ந்த நாடுகள் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்கள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதுபோன்ற மனநிலையை கைவிட வேண்டும்.
பூமி வெப்பமயமாதலுககு வளர்ந்த நாடுகள்தான் பொறுப்பு. வளர்ந்த நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு பூபேந்தர் யாதவ் பேசினார்.