சென்னை: பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வை நடத்துவது குறித்து வரும் 17-ம் தேதி ஆலோசிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் ஜுன் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வின்போது முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆன்லைன் இணைப்பு வசதி சரியாக இல்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வு மூலம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி நேரடி கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். இக்கலந்தாய்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த சான்றிதழ் கட்டண உயர்வு அறிவிப்பு திரும்பப் பெறப்படும். இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும். பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஏற்கெனவே பாடத்திட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்ட மாற்றம் வரும் கல்வியாண்டில் இருந்தே நடைமுறைக்கு வரும்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பள்ளியிலேயே மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களுக்கு மாணவர்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். உயர்கல்விக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பேட்டியின்போது உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன் உடனிருந்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்குமான கட்டணங்கள் அண்மையில் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு தற்போது வாபஸ் பெறப் பட்டுள்ளது.