பாஜக தலைவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) குச்சியில் கட்டிய கேரட் போல பயன்படுத்துகிறார்கள் என்றும், இது ஒரு அரசியல் கருவி என்றும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அஸ்ஸாமில் ஒரு பொது நிகழ்வில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி, ” அசாமில் சிஏஏ வை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் மௌனம் சாதிக்கிறார். அஸாமுக்கு இரண்டு நாள் பயணமாக வந்தபோது அமித் ஷா சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து அமைதி காத்தார், ஆனால், மேற்கு வங்கத்தில் சிஏஏ-வை அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்தார். பாஜக தலைமையிலான அரசு செய்யும் அரசியலுக்கு இது ஒரு சான்று. அவர்கள் இந்தப் பிரச்சினையை ஒரு ஜம்லாவாகப் பயன்படுத்துகிறார்கள். சிஏஏவை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கிறது, இது ஒரு கடுமையான மசோதா” என்று கூறினார்.
மேலும், “குடியுரிமை திருத்த மசோதா 2019 இல் மக்களவையில் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது, புதிய சட்டத்தின் விதிகளை வகுக்க 3-4 மாதங்கள் ஆகும், ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஆறு நீட்டிப்புகளை மத்திய அரசு கோரியது, ஆனால் இன்னும் அவர்களால் இச்சட்டத்தின் விதிகளை உருவாக்க முடியவில்லை” என்று அவர் மத்திய அரசை கிண்டல் செய்தார்.
தொடர்ந்து பேசிய அபிஷேக் பானர்ஜி, “சிலர் இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாகவும், இன்னும் சிலர் முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் வகுப்புவாத கண்ணாடியை கழற்றினால், இந்தியா ஆபத்தில் இருப்பதை அவர்கள் காண்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM