நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வற்புறுத்தல்

சென்னை:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு சுமார் ரூ. 150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது. ஆளுநர் உரையின் போது, அனைத்து ரக நூல் விலை உயர்வு பற்றியும், அதனால் சுமார் 40 லட்சம் நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளது குறித்தும், விலை உயர்வை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும், நான் சட்டமன்றத்தில் பேசினேன்.

நூல் விலை உயர்வினால் நெசவுத் தொழிலே நலிந்துவிடும் அபாயத்தில் உள்ளது என்றும், திருப்பூரில் பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் கூறி, அரசு உடனடியாக நூல் விலையினைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் கழக உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள்.

ஆனால், இதுவரை நூல்விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த விடியா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், நம் நாட்டுக்கு ஏற்றுமதி மூலம் பல நூறு கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டுவதிலும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முன்னணியில் இருந்தது. ஆனால் இப்போது , நூல் விலை உயர்வினால் திருப்பூர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவாளர்களும் வேலை வாய்ப்பின்றி ஸ்தம்பித்துப் போயுள்ளனர்; மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

பஞ்சு இறக்குமதியில் உள்ள சிரமங்கள், இதனால் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத நூல் விலை உயர்வு, நெசவுத் தொழிலை நலிவடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட நெசவாளர்களும், பின்னலாடைத் தொழிலாளர்களும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

நெசவுத் தொழிலை நலிவில் இருந்து மீட்டெடுக்க வழிகாட்டாத இந்த விடியா அரசு, போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறையும் நிலை ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

எனவே, நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், நூல் விலை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.