இலங்கைக்கு உதவ அரிசி கொள்முதல்; அரசாணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

Chennai HC refuses ban to TN Govt procurement of rice for Sri lanka: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கைக்கு உதவும் வகையில் அரிசி வழங்குவதற்காக, அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகள் என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ரூ.134 கோடியை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த அரிசி அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏனெனில், இந்திய உணவுக் கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. எனவே அங்கிருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் மிச்சமாகும்.

இதையும் படியுங்கள்: இலங்கை நெருக்கடியில் திருப்புமுனை : பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்கிரமசிங்கே?

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்திய உணவுக் கழகத்தின் அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல், அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் அனுமதியுடன்தான் அரிசி அனுப்பப்படுகிறது. மேலும், அவசர நிலை நேரங்களில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.