`ஆஹா தமிழ்’ ஓ.டி.டி-யில் வெளியாகவிருக்கிறது `குத்துக்கு பத்து’ வெப்சீரிஸ். யூடியூபில் பிரபலமான டெம்பிள் மங்கிஸ் சேனல் இதன் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுக்கின்றனர். அந்த டீமிடம் ஒரு ஜாலியான சந்திப்பு…
“என்னுடைய வாழ்க்கையில ஷார்ட் பிலிம்கூட எடிட் பண்ணுனது இல்லை. ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே டெம்பிள் மங்கிஸ் பார்த்துட்டிருப்பேன். விஜய் வரதராஜ் அண்ணாவை மீட் பண்ணினேன். ‘லேப்டாப் இருக்கா’ன்னு கேட்டார். ‘இருக்கு’ன்னு சொன்னேன். உடனே, எடிட்டர் ஆக்கிட்டார். ‘லேப்டாப் இருக்குறதுதான் அதிகபட்ச குவாலிபிகேஷனா பார்த்தேன்’ன்னு அவர் தமாஷா சொன்னார். முக்கியமா, அண்ணனுக்கு பாதி நேரம் வண்டியும் நான்தான் ஓட்டுவேன். ஏன்னா, அண்ணாகிட்ட லைன்சென்ஸ் இல்ல” என சந்தோஷ் சொல்லி முடிக்க, கோ ஆக்டர் அப்துல் தொடர்ந்தார்,
“ஆரம்பத்துல இருந்தே, எங்க டீமுடைய நோக்கம் படம் பண்ணணும்ங்குறதுதான். முதல்ல ஒரு படம் பண்ணியிருந்தாலும் இது ரிலீஸாகாம இருக்குறது எங்களுக்குக் கஷ்டமா இருந்தது. எல்லாரும் எப்போ ரிலீஸாகும்னு கேட்குறப்போ, ‘ஒரு சீரிஸ் ரிலீஸாகுது’ன்னு சொல்ல ஹேப்பியா இருக்கும்” என்று சொல்லி முடித்தார்.
பத்ரி, “இந்த ஸ்க்ரிப்ட் விஜய் முன்னாடியே சொல்லியிருந்தார். முதல்ல எனக்கு ஒரு ரோல் சொல்லியிருந்தார். அது பண்ண முடியல. இப்போ பக்ரின்னு ரோல் பண்ணியிருக்கேன். எங்க டீம் தாண்டி போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், சம்யுக்தான்னு நிறைய பேர் இருக்காங்க” என்று அவர் முடிக்க, இயக்குநர், நடிகர் விஜய் வரதராஜிடம் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.
“‘குத்துக்கு பத்து’ டபுள் மினீங் மாதிரியிருக்கே?”
“நேரடியான மினீங்தான். சீரிஸ் பார்த்துட்டு ஆடியன்ஸ் எடுத்துக்குறதைப் பொறுத்துதான்” என ஒன்லைனில் அவரிடமிருந்து பதில் வந்தது. அதைத் தொடர்ந்து,
“எங்க டீம் எப்போதும் ஜாலியா இருப்போம். எங்க எடிட்டர் சந்தோஷ், பாவம் சின்ன வயசுல எங்க டீம்ல வந்து சிக்கிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்லயே எடிட்டிங் பண்ணுன்னு சொன்னப்ப முழிச்சான். அப்புறம் உடனே, நிறைய யூடியூப் சேனல்ல ஸ்பாட் எடிட் எப்படிப் பண்றதுன்னு பார்த்துட்டு பண்ணிக் கொடுத்திருக்கான். இவனும், அசோசியேட் எடிட்டரும் பண்ணுன கலாட்டல்லாம் தாண்டி வெப் சீரிஸ் நல்லா எடிட் பண்ணிக் கொடுத்திருக்கான்” என சந்தோஷுக்கு விஜய் கிரெடிட் கொடுக்க, பத்ரி தொடர்ந்தார்.
“நிறைய லைவ் லொக்கேஷன்ல எடுத்தோம். கேமரா வெச்சிட்டு எடுத்துட்டிருப்போம். திடீர்னு போலீஸ் ஜீப் சத்தம் கேட்டா ஓடிருவோம்” என அவர் ஃபன் பண்ண, அப்துல் தொடர்ந்தார்.
“இருபத்து அஞ்சு நாளுல மொத்த சீரிஸும் எடுத்து முடிச்சிட்டோம். ஏழு எபிசோடு இருக்கு. எல்லாரும் ஆன்லைன் ஆட்கள்ங்கிறதனால எப்படி நடிக்கணும்னு தெரிஞ்சிருந்தது. விஜய் எழுதுற சீன்ஸுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு எங்க டீமுக்கு நல்லாத் தெரியும். இதனால, வேலை ஈஸியா, வேகமா நடந்தது. கேமராமேன் ஜாக் கொஞ்சமும் டயர்டு ஆகாம உழைச்சிக்கிட்டே இருந்தார்.
இந்த சீரிஸுக்கு நடிக்க போஸ் வெங்கட் அண்ணா வந்திருந்தார். ஸ்பாட்டுக்கு வந்த முதல் நாளுல மட்டும் ஒரு மாதிரியிருந்தார். அப்புறம் ரொம்ப ஜாலியா இருக்க ஆரம்பிச்சிட்டார். ’நிறைய ஷூட்டிங் போயிருக்கேன். ஆனா, இந்த ஸ்பாட்ல இருந்து வீட்டுக்குப் போகறப்போ தினமும் சிரிச்சிக்கிட்டே போவேன். ரொம்ப கலகலப்பா ஜாலியா இருந்தது’ன்னு சொன்னார்” என்பதை பெருமிதத்துடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
“நிறைய அரசியல் கன்டென்ட் இருக்கும் போலயே” என நாம் பத்ரியிடம் கேட்க,
“இந்தக் கேள்விக்கான பதிலை டைரக்டர்தான் சொல்லணும்” என அவர் விவரமாக விஜய் பக்கம் கை காட்டினார்.
“கதையில சட்டயர் இருக்கு. ஆனா, அதுமட்டுமே கதை மாதிரி இருக்காது. போற போக்குல சில விஷயங்கள் சேர்த்திருக்கோம். எதையும் வலுக்கட்டாயமா வைக்கல. ஏன்னா, பார்க்குற ஜனங்களுக்குக் கோபம் வந்துரும்” என பெரிய ஸ்பாய்லர்கள் இல்லாமல் முடித்தார்.
“நாங்க கஷ்டப்பட்டுப் பண்ணியிருக்குற ‘குத்துக்கு பத்து’ சீரிஸை எல்லாரும் ஓ.டி.டி தளத்துல பார்க்கணும். ஆனா எங்ககிட்டயே டெலிகிராம் லிங்க் கிடைக்குமான்னு கேட்குறாங்க. இது வருத்துமா இருக்கு. கண்டிப்பா எல்லாரும் ஓ.டி.டி தளத்துல பாருங்க” டீமாக வேண்டுகோள் வைத்தனர் டெம்பிள் மங்கிஸ்.