புதுடெல்லி :
டெல்லியில் பிரதமர் மோடி பற்றிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை. மக்கள் நலனுக்காகவே அரசியல் செய்கிறார். மக்கள் நலனை கருத்தில் கொண்டுதான் முடிவுகள் எடுக்கிறார்.
தலித்கள், ஏழைகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் மீது ஆழ்ந்த அன்பு செலுத்துவதுதான் மோடியின் சிறப்பு.
பிரதமராகவும், குஜராத் முதல்-மந்திரியாகவும் மோடி கொண்டு வந்த மாற்றங்களை மக்கள் கண்டுள்ளனர். பிரதமர் மோடியை போல் மற்றவர்கள் சொல்வதை கேட்பவரை நான் பார்த்ததே இல்லை.
ஒவ்வொருவர் சொல்வதையும் அவர் பொறுமையாக கேட்பார். சமுதாயத்தை தனது குடும்பமாக கருதி அவர் நடைபோட்டு வருகிறார்.
குஜராத் முதல்-மந்திரி ஆவதற்கு முன்பு மோடி எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. ஒரு பஞ்சாயத்து உறுப்பினராக கூட இருந்தது இல்லை. பிரச்சினைகளை அக்கறையுடன் புரிந்துகொண்டு தீர்வு கண்டுபிடிக்கும் திறமைதான் மோடியை வெற்றிகரமான முதல்-மந்திரியாக மாற்றியது.
மோடி முதல்-மந்திரி ஆன பிறகு சமுதாயத்தின் கடைசி மனிதனுக்கும் எப்படி திட்டங்களை தீட்ட வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்பதற்கு முன்னுதாரணத்தை உருவாக்கினார்.
கடந்த 8 ஆண்டுகளில் எப்படி கொள்கைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் உலகத்துக்கு முன்னுதாரணமாக மோடி இருக்கிறார்.
மோடியின் வெளியுறவு கொள்கை தெளிவானது. நம் நாட்டின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளித்தபடி, ஒவ்வொரு நாட்டுடனும் நட்புறவு கடைபிடிக்க விரும்புவதுதான் அந்த கொள்கை என்று அவர் பேசினார்.