ஸ்ரீகாகுளம் : ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சுனாபள்ளி கடற்கரையில், தங்க நிறத்தில் ஜொலிக்கும் பிரமாண்ட தேர் மிதந்து வந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
வடக்கு ஆந்திர கடலோர மாவட்டமான ஸ்ரீகாகுளத்தில் சுனாபள்ளி கடற்கரை பகுதி உள்ளது. இங்கு தங்க நிறத்தில் ஜொலிக்கும் பிரமாண்ட தேர் கடலோரமாக நேற்று மிதந்து வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் தேரை கரைக்கு இழுத்து வந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து அந்த தேரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தகரத்தால் செய்யப்பட்ட அந்த தேரில் தங்க நிற முலாம் பூசப்பட்டுள்ளது. தேரின் மீது 16.01.2022 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. தேரின் தோற்றம் மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை வைத்து, அது மியான்மர் நாட்டில் செய்யப்பட்டு இருக்கலாம் என, கூறப்படுகிறது. அசானி புயல் காரணமாக ஆந்திர கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், இந்த தேர் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு மிதந்து வந்திருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
Advertisement