நியூயார்க்:’அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 85 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினால், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு விலக்கிக் கொள்ளப்படும்’ என நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் லெடிஷியா ஜேம்ஸ், முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்டு டிரம்பின் தொழில் தொடர்பாக மூன்று ஆண்டுகள் புலனாய்வு நடத்தினார். இதன் முடிவில், டொனால்டு டிரம்ப் தன் நிறுவனங்கள், சொத்துக்கள், நிதி அறிக்கைகள் ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலியாக அதிகரித்து காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த வழக்கு, நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டொனால்டு டிரம்பின் சொத்துக்கள், நிதி அறிக்கைகள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு முறை உத்தரவிட்டும் அதை மதிக்காத டிரம்ப் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆவணங்களை தாக்கல் செய்யும் வரை, தினமும் 7.50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வரும் 20ம் தேதிக்குள் நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு, 85 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினால், நீதிமன்ற அவமதிப்பு விலக்கிக் கொள்ளப்படும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement