இலங்கையின் அடுத்த பிரதமராக மீண்டும் ரனில் விக்ரமசிங்கே!| Dinamalar

கொழும்பு :இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராக, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே, 73, நேற்று பதவி ஏற்றார். பார்லிமென்டில் அவரது கட்சியின் ஒரே எம்.பி.,யாக அவர் மட்டுமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் மீது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் சமீபத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.



கலவரம் மூண்டது

இதையடுத்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது. இதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவர் குடும்பத்துடன் தலைமறைவாக பதுங்கி உள்ளார். இந்நிலையில், புதிய இடைக்கால அரசை அமைக்கும் நடைமுறையை அதிபர் கோத்தபய ராஜபக்சே துவக்கினார். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை, புதிய இடைக்கால பிரதமராக நியமிக்க அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்தார்.ஆனால், சஜித் பிரேம தாசா தரப்பில் இருந்து பல்வேறு நிபந்தனைகள் விதித்து, அதிபருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

அதில், ‘குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்க முடியும்’ என்ற நிபந்தனை பிரதானமாக இடம் பெற்று இருந்தது. இதற்கிடையே, இலங்கையில் நான்கு முறை பிரதமராக பதவி வகித்தவரும், ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ரனில் விக்ரமசிங்கேவை அழைத்து, அதிபர் கோத்தபய நேற்று முன்தினம் பேச்சு நடத்தினார்; நேற்றும் பேச்சு தொடர்ந்தது.
இடைக்கால பிரதமராக பதவி ஏற்க ரனில் ஒப்புக் கொண்டார். அவருக்கு ஆதரவு அளிக்க, ஆளும் இலங்கை பொதுஜன பெருமுன கூட்டணி எம்.பி.,க்கள், பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா எம்.பி.,க்களில் ஒரு பிரிவினர் மற்றும் இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர். இதற்கிடையே, பிரதமராக பதவியேற்க தயாராக உள்ளதாக சஜித் பிரேமதாசா நேற்று மாலை அறிவித்தார். அதை கோத்தபய நிராகரித்தார்.

15 அமைச்சர்கள்

இதையடுத்து, இலங்கையில் புதிய இடைக்கால பிரதமராக ரனில் விக்ரமசிங்கே நேற்று பதவி ஏற்றார். 15 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. இலங்கை பார்லி.,க்கு 2020ல் நடந்த தேர்தலில், ரனில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். அவரது தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு, ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. ஆனால், தேசிய அளவில் கட்சிகள் பெற்ற ஓட்டுகளின் விகிதாசார அடிப்படையில், எம்.பி., சீட் வழங்கும் நடைமுறை இலங்கையில் உள்ளது. இந்த அடிப்படையில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு எம்.பி., சீட் கிடைத்தது. இதன் வாயிலாக ரனில் விக்ரமசிங்கே எம்.பி., ஆனார்.ஒரு சீட் மட்டுமே வைத்துள்ள எம்.பி.,யாக இருக்கும் நிலையிலும், ரனில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சினர் ஆதரவுடன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.மிக நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.

இலங்கை நிலவரம்: மத்திய அரசு ஆய்வு

இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றதில், பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு அதிருப்தி உள்ளது. இதனால் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.கடந்த காலங்களில் ரனில் விக்ரமசிங்கே, காங்கிரசின் முன்னாள் பிரதமர் ராஜிவ் மற்றும் காங்., தலைவர் சோனியாவுக்கு இணக்கமாக செயல்பட்டுள்ளார். இதையும் கருத்தில் வைத்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வு குறித்தும், அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகம், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்து வருவதாக, டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. டில்லியில் நாளை நடக்கவுள்ள கேபினட் கமிட்டி கூட்டத்தில், இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர்
ஜெய்சங்கர் ஆகியோர் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.- புதுடில்லி நிருபர் –

‘பாஸ்போர்ட்’ ஒப்படைக்க உத்தரவு

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை, இலங்கையின் கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது, மகிந்த ராஜபக்சே, அவரது மகனும், எம்.பி.,யுமான நமல் ராஜபக்சே, இலங்கை பொது ஜன பெருமுன கூட்டணியின் 13 எம்.பி.,க்கள் மற்றும் மேற்கு மாகாண மூத்த டி.ஐ.ஜி., தேசபந்து உள்ளிட்ட 16 பேர் வெளிநாடு பயணிக்க நீதிமன்றம் தடை விதித்தது. அவர்களின் ‘பாஸ்போர்ட்’டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக, அந்நாட்டு பார்லி.,யில் வரும் 17ல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய இடைக்கால அரசில் இடம்பெறும் உறுப்பினர்கள் நேற்று நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பார்லி.,யின் சிறப்பு அனுமதி பெற்ற பின், தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.