பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்; லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்; மனமுடைந்து தற்கொலை செய்த இளைஞர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுதக்குடி கிராமத்தில், தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் மணிகண்டன். ஒரு வருடத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தான் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பத்திருக்கிறார். அதனை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து மணிகண்டனுக்கு முறையான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனால் மணிகண்டன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ், முதல் தவணைக்கான நிதியை வழங்க, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் கிராம மேற்பார்வையாளர், மணிகண்டனிடம் மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த மணிகண்டன் மிகவும் சிரமப்பட்டு மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதனை மகேஷ்வரனிடம் கொடுத்துள்ளாராம்.

அடுத்தக்கட்டமாக, கீழ்த்தளம் மேலும் ரெண்டல் ஆகியவற்றை கட்டியவுடன் இரண்டாவது தவணைக்கான பணத்தை வழங்க, கிராம மேற்பார்வையாளர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணத்தை மணிகண்டன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

லஞ்சம்

இந்நிலையில் வீடு கட்டுமானத்திற்கான அடுத்தக்கட்ட பணிகளுக்கு பணம் தேவைப்பட்டதால் மிகுந்த உளைச்சல் அடைந்திருக்கிறார் மணிகண்டன். 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும் கூட, இரண்டாம் கட்ட தவணைக்கான பணம் கிடைக்கவில்லை. சில நாள்களில் வந்து விடும் என மணிகண்டனிடம், கிராம மேற்பார்வையாளர் தெரிவித்திருக்கிறாராம்.

ஆனால் பல நாள்கள் ஆகியும் பணம் வரவில்லை. அதன் பிறகு மணிகண்டனுக்கு, மகேஷ்வரன் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியை பெற, லஞ்சம் கொடுப்பதற்காக, மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாலும், வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாலும் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி கொல்லி மருத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் கிராம மேற்பார்வையாளர் மகேஷ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று மணிகண்டன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அநியாயமாக ஒரு உயிர் பிரிந்த நன்னிலத்தில், மனசுக்குள் வலி. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஊழலை எதிர்த்து உயிர்துறந்த, மணிகண்டன் இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? புரையோடிப்போன ஊழலால் ஏற்பட்ட உயிரிழப்பு.

நல்ல திட்டங்களை ஊழல் ஏதுமின்றி. மக்களுக்கே, நேரடியாக மத்திய அரசு வழங்கினால் அது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாக் கூச்சலிடும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், மரணமடைந்த மணிகண்டனுக்கு பதில் சொல்லவேண்டும்.

“தேரா மன்னா செப்புவது உடையேன்”… என்று நெஞ்சம் பதறி ஆட்சித் தலைவனை கேள்வி கேட்ட கண்ணகி தாயை வணங்கி, மக்களே நான் புறப்பட்டு விட்டேன் நன்னிலத்திற்கு. அனைவரும் ஒன்று கூடி அரசிடம் மணிகண்டன் அருந்திய நஞ்சுக்கு நீதி கேட்போம். எத்திப் பிழைப்பவர்களு க்கு, நல்ல புத்தி புகட்டுவோம்.” குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.