மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்: குமாரசாமி

பெங்களூரு:

ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் ஜனதா ஜலதாரே கூட்டம் பெங்களூரு காந்திநகரில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜனதா தளம் (எஸ்) கட்சி சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்தால் பெங்களூருவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நீர் ஆதாரங்களை பாதுகாத்து அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஜலதாரே திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறுகிறோம். தேவகவுடா பிரதமராக இருந்தபோது பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு காவிரியில் இருந்து 9 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டது.

இன்று நகர மக்கள் காவிரி நீர் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு தேவகவுடா தான் காரணம். பெங்களூருவில் முதன் முதலாக மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவனே நான் தான். மென்பொருள் உற்பத்தி புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் தேவகவுடா. பெங்களூருவில் ஏரிகள் பாதுகாக்கப்படும். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதை பெங்களூரு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜலதார ரத யாத்திரை நிறைவு நாள் பொதுக்கூட்டம் நெலமங்களாவில் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.