2024ல் மீண்டும் நான் தான் பிரதமர் வேட்பாளர் – பிரதமர் மோடி சூசகம்!

அடுத்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தானே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் நடந்த விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் மாநில அரசின் நிதி உதவித் திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர்
நரேந்திர மோடி
உரையாற்றினார். அப்போது, முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் பிரதமர் பதவி குறித்து தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அதில், “ஒரு நாள் ஒரு பெரியத் தலைவர் என்னைச் சந்தித்தார். அந்தத் தலைவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்ப்பவர். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அரசின் சில முடிவுகளில் அவர் மகிழ்ச்சி அடையவில்லை. அதனால் என்னைச் சந்திக்க வந்தார். சந்திப்பில் அவர் சொன்னார், ‘மோடி ஜி, இந்த நாடு உங்களை இரண்டு முறை பிரதமர் ஆக்கி உள்ளது. இதற்கு மேல் இன்னும் என்ன வேண்டும்’ என்று… ஒருவர் இரண்டு முறை பிரதமரானால் அனைத்தையும் சாதித்து விட்டார் என்பது போல் பேசினார்.

அவருக்கு, மோடி ஒரு வித்தியாசமான குணங்களால் உருவாக்கப்பட்டவர் என்பது தெரியவில்லை. இந்த குஜராத் மண் தான் என்னை உருவாக்கியது. அதனால் தான், இப்போது நான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனது கனவு நிறைவேறும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்” என்று பேசினார். எனினும், தனக்கு அறிவுரை சொன்ன தலைவர் யார் என்பதை பிரதமர் நரேந்திர மோடி சொல்லவில்லை. இதன் மூலம், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும், தானே,
பாஜக பிரதமர் வேட்பாளர்
என்பதை, பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.