புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. பஞ்சாபில் ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால் அதிர்ச்சியடைந்த குலாம் நபி ஆசாத், கபில்சிபல், சசி தரூர், ராஜ் பப்பர் உள்ளிட்ட ஜி-23 எனப்படும் மூத்த 23 தலைவர்கள் தலைமை மாற்றத்தை வலியுறுத்தி கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். குறிப்பிட்ட சிலரிடம் அதிகாரக் குவியல் இல்லாமல், அனைத்து மட்டங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இந்நிலையில் கடந்த மார்ச் 14ம் தேதி டெல்லியில் கட்சியின் செயற்குழு கூட்டப்பட்ட போது, ராகுல் காந்தியை மீண்டும் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று சில தலைவர்கள் வலியுறுத்தினர். எனினும் சோனியா காந்தி தற்காலிக தலைவராக தொடர்வார் என்றும், ‘சிந்தனை அமர்வு’ எனும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த மாநாடு நடக்கிறது. முன்னதாக 2013ம் ஆண்டு ‘சிந்தனை அமர்வு’ கூட்டம் நடந்தபோது, அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. தற்போது மத்தியில் ஆட்சியில் இல்லாததுடன், 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 100க்கும் குறைவான எம்பிக்களே உள்ளனர். தேசிய கட்சியான காங்கிரஸ் மிகவும் பலவீனமாகி உள்ள சூழ்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு உதய்பூரில் மாநாடு தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து 430 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முதல்நாளான இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தொடக்க உரையாற்றுகிறார். நாளை மறுநாள் (மே 15) ராகுல்காந்தி நிறைவுரை ஆற்றுகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து உதய்பூருக்கு ரயிலில் ராகுல்காந்தி நேற்றிரவு பயணம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் வியூகம் வகுக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலவரம், கொரோனா பாதிப்பு, வேளாண் பிரச்னைகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை, காஷ்மீர் தொகுதி மறுவரையறை, ஒன்றிய-மாநில உறவுகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்வது ஆகிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் பல்வேறு குழுக்களாக அமர்ந்து விவாதிக்க உள்ளனர். மேற்கண்ட பிரச்னைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இறுதி செய்யப்படும். அதேபோல் கட்சி அமைப்புக்குள் ‘ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. கட்சியில் எஸ்சி – எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு 50 சதவீத சீட் வழங்க வேண்டும் என்று சமூக நீதி குழுவும், 50 வயதுக்கு உட்பட்டோருக்கு 50 சதவீத சீட் வழங்க வேண்டும் என்று இளைஞர் விவகார குழுவும் பரிந்துரை செய்துள்ளன. இதேபோல், 6 குழுக்களும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளதால், அவை பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5வது ‘சிந்தனை அமர்வு’உதய்பூரில் இன்று காங்கிரசின் சிந்தனை அமர்வு கூட்டம் தொடங்கியது. சோனியா காந்தி கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் பச்மாரி (1996), சிம்லா (2004), ஜெய்ப்பூர் (2013 ஜனவரி) ஆகிய 3 இடங்களில் சிந்தனை அமர்வு நடந்த நிலையில், தற்போது நான்கவதாக உதய்பூரில் நடக்கிறது. ஆனால் காங்கிரஸ் வரலாற்றில் இன்று தொடங்கியுள்ள சிந்தனை அமர்வு கூட்டமானது ஐந்தாவது கூட்டமாகும். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில்தான், இதுபோன்ற சிந்தனை அமர்வு கூட்டம் முதன் முதலில் கடந்த 1974ம் ஆண்டு நரோராவில் நடந்தது. சோனியா காந்தி தீவிர அரசியலில் காலடி எடுத்து வைத்த பின்னர்தான், சிந்தனை அமர்வு கூட்டங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன. தற்போது கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, உதய்பூரில் சிந்தனை அமர்வு கூட்டம் தொடங்கியுள்ளது.