இலங்கை தமிழர்களுக்கு உதவி- மு.க.ஸ்டாலினை சந்தித்து வைகோ, திருமாவளவன் பாராட்டு

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் சுயமரியாதை இயக்க தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

இலங்கை ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாக இது அமைந்தது. 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.

அதன் பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈழத் தமிழர்களின் கண்ணீரை துடைக்க தமிழ்நாட்டில் இருந்து உதவ வேண்டும் என்ற எண்ணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் உருவாகி அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். மனிதநேயத்துடன் அவர் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. ஈழத் தமிழர்களின் பசி பட்டினியை முதலில் போக்க வேண்டும்.

அதற்காக ரூ.134 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் உயர்தர அரிசி அனுப்புவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் அனுப்பப்படுகிறது. தமிழர்களின் குழந்தைகள் பால் பவுடர் கிடைக்காமல் தவிப்பதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் இவை அனுப்பப்படுகிறது.

மேலும் ரூ.28 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்களும் இலங்கைக்கு செல்கிறது. மொத்தம் ரூ. 177 கோடி மதிப்புள்ள உணவு, மருந்து, பால் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.

இதற்கான ஏற்பாடு செய்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை பெருமையாக உள்ளது. அவரின் முயற்சிக்கு ஒன்றிய அரசு எவ்வித முட்டுக்கட்டையும் போடாமல் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை தமிழர்களின் துன்பத்தையும் துயரத்தையும் போக்கும் வகையில் முதல் கட்டமாக இதனை செய்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் கண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடைத்து இருப்பது நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது. நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெருமை அடையக்கூடிய வகையில் மு.க.ஸ்டாலின் இடம் பிடித்துள்ளார்.

முதலில் பசி, பட்டினியை போக்கவும், குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களை பாதுகாக்கவும் இந்த அரசு முன் வந்து இருக்கிறது. அடுத்த கட்டமாக மற்ற உதவிகளையும் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.