காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை என, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம்
ராஜஸ்தான்
மாநிலத்தின் உதய்பூரில் தொடங்கி உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:
கட்சியின் அமைப்பில் உடனடியாக மாற்றம் தேவைப்படுகிறது. நாம் பணிபுரியும் முறையையும் மாற்ற வேண்டும். இந்த மாநாட்டில் கட்சியினர் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், கட்சியின் வலிமை மற்றும் ஒற்றுமை குறித்த செய்தி நாடு முழுவதும் செல்ல வேண்டும்.
நமது தனிப்பட்ட விருப்பங்களை விட கட்சியை முக்கியமானதாக கருத வேண்டும். கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும். கட்சி நமக்கு நிறைய கொடுத்துள்ளது. அதை திருப்பி செலுத்த வேண்டிய நேரம் இது. கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை.
குறைந்த அரசு, பெரிய நிர்வாகம் என பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் வலியுறுத்துகிறது. இதற்கு சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவது என்பது அர்த்தம். வரலாற்றை மாற்றியமைக்க முழு மனதுடன் முயற்சி எனவும் அர்த்தமாகிறது. மஹாத்மா காந்தியை கொன்றவர்களை பெருமைப்படுத்தி, ஜவஹர்லால் நேரு செய்த பணிகளை வரலாற்றில் இருந்து அழிக்கவும் நினைக்கின்றனர். பேச்சாற்றல் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு ஆறுதலாக எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.