பத்தாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார், நேபாளத்தை சேர்ந்த 48 வயதாகும் லக்பா ஷெர்பா. தற்போது அமெரிக்காவில் தன் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் இவர், ‘அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய சிகரமான K2-வில் ஏறவிருக்கிறேன்’ என்று கூறுகிறார்.
நேபாள நாட்டை சேர்ந்த லக்பா ஷெர்பா, நேற்று எவரெஸ்ட் சிகரத்தில் 10வது முறையாக ஏறியுள்ளார். இதன் மூலம் தன்னுடைய சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். 10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் முதல் பெண் என்ற சாதனையை அவரின் சகோதரர் அறிவிக்க, நேபாள நாட்டின் அதிகாரிகளால் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ஷெர்பா, நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மகாலு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீ (13,000 அடி) உயரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தன் பள்ளிக் கல்வியைக்கூட முடித்திராத ஷெர்பா, நாடோடி திபெத்தியர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எனவே, உயரமான இடங்களில் வாழ்ந்து பழகியவர்.
தன் குடும்ப சூழலின் காரணமாக சிறுவயது முதலே சகோதரர்கள் உடன் சேர்ந்து பல மைல் தொலைவுக்கு நடந்து பழகிய ஷெர்பாவுக்கு மலையேறுதல் பழக ஆரம்பித்தது. அவரது வாழ்விடத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை காணமுடியும். மேலும், சிறுவயது முதலே எவரெஸ்டில் ஏறுபவர்களுக்கு போர்ட்டராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2000-ம் வருடம் தன் முதல் எவரெஸ்ட் பயணத்தை தொடங்கினார் ஷெர்பா. அதன் மூலம் எவரெஸ்டில் ஏறிய முதல் நேபாள பெண் என்ற சாதனையை நிகழ்த்தினார். அதன் பின், அமெரிக்காவில் வாழும், ருமேனியாவில் பிறந்த, மலை ஏறுவதில் ஆர்வமுள்ள ஜார்ஜ் டிஜ்மரெஸ்குவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தன் கணவருடன் இணைந்து 2001 முதல் 2006 வரை ஐந்து முறை எவரெஸ்டில் ஏறினார். பின் அமெரிக்காவில் குடியேறிய ஷெர்பா, தன் திருமண வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். தன மூன்று குழந்தைகளுடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஷெர்பா, தன்னுடைய 10-வது எவரெஸ்ட் மலையேற்றத்தை கிரௌட் ஃபண்டிங் மூலமாக நிகழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள லக்பா ஷெர்பா, ‘நேபாள நாட்டின் ஒரு குகையில் பிறந்தேன். எங்கள் வீட்டில் இருந்து பார்த்தால் எவரெஸ்ட் தெரியும். அதில் ஏறவேண்டும் எனபதே என் விருப்பமாக இருந்தது. முதல் முறையாக எவரெஸ்டில் ஏறியபோது , என் கனவை அடைந்தது போன்று உணர்ந்தேன். நான் ஷெர்பா இனக்குழு பெண்கள் மற்றும் நேபாளி பெண்களின் நிலையை மாற்றியது போல் உணர்ந்தேன். நான் என் வீட்டிற்கு வெளியே இருப்பதை ரசித்தேன், அந்த உணர்வை எல்லா பெண்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். என் அம்மா மற்றும் சகோதர்கள் நான் மலை ஏறுவதை ஆதரிக்கவில்லை. இப்படி செய்தால், நான் திருமணம் செய்து கொள்ள தகுதியில்லாதவளாகி விடுவேன் என்று கவலை கொண்டனர். தற்போது நான் முதியவர்களை கவனிப்பது, வீட்டுவேலைகள் போன்ற பணிகளைத்தான் செய்து வருகிறேன். அதில் வரும் வருவாய் மூலம் என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
லக்பா ஷெர்பாவின் சாதனை குறித்து, 15 வயதாகும் அவரின் இளைய மகள் ஷைனி கூறுகையில்,
‘என் அம்மாவின் முன்னேற்றத்தை உற்சாகமாகவும், ஆர்வமாகவும் பார்த்துக்கொண்டிருகிறேன். எந்த பின்புலமும் இல்லாமல் என் அம்மா இத்துனை தூரம் சாதித்துள்ளார்’ என்று நெகிழ்ந்துள்ளார்.