பேரறிவாளனுக்கு கருணை வழங்குவது குடியரசுத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது என்றும், எனவே தன்னை சிறையில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வாதம் தாக்கல் செய்துள்ளது.
தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில் மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
அந்த வாதத்தில் “ஏற்கெனவே மரண தண்டனை பெற்ற இவருக்கு கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையின் உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது. மேலும் தற்போது இவரை விடுதலை செய்வது தொடர்பான மனு குடியரசு தலைவர் முன்பு பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 9ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு வேறு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது” என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க… விடுதலையாவாரா பேரறிவாளன்? உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
மேலும் “பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இந்த விவகாரத்தின், குற்றத்தின் தீவிரதன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எதையும் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே தான் ஆளுநர் இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அனுப்பியுள்ளார். மேலும் இது ஐ.பி.சி 302ன் கீழ் தண்டனை பெற்றாலும் வழக்கை விசாரித்தது. மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு அவ்வாறு இருக்கும்போது, இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே தற்போது இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. எனவே பேரறிவாளன் விடுதலை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM