“புஷ்பாவை அல்ல… சர் சி.வி.ராமன் போன்றோரை ரோல் மாடலா எடுங்க”-மாணவர்களுக்கு டிஐஜி அறிவுரை

“ ‘புஷ்பா’ திரைப்பட கதாபாத்திரத்தை மாணவர்கள் ரோல் மாடலாக எடுத்து கொள்ளாமல், புகழ்பெற்ற சர்.சி.வி.ராமன் போன்றோரை ரோல் மாடலாக எடுத்து கொள்ள வேண்டும்” என்று ரயில்வே காவல்துறை டிஐஜி மாநில மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு சென்னை ரயில்வே காவல்துறை சார்பாக, `மாணவர்கள் பாதுகாப்பாக ரயில் பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்’ குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும் போது அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எக்காரணம் கொண்டும் படியில் நின்றுகொண்டும், ரயிலில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்யக்கூடாது, ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
image
மேலும் தண்டவாளங்களை கவனக்குறைவாக கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. மேலும் மாணவர்கள் ரயிலில் தகராறில் ஈடுபடும்போது ரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் குறித்தும், இதற்கு முன் மாணவர்கள் ரயிலில் தகராறில் ஈடுபட்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சம்பந்தமாகவும், கைது நடவடிக்கைகள் குறித்தும், வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகள் சம்மந்தமாகவும் எடுத்துக்கூறப்பட்டது. ரயில் விபத்து மரணங்கள் குறித்த புகைப்படங்களும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக பதிவு செய்யப்பட்ட ரயில் விபத்து மரணங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு முகாமில் ரயில்வே காவல்துறை டிஐஜி அபிஷேக தீக்ஷத், ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை அதிகாரி சவுரோகுமார், சென்ட்ரல் ரயில்வே காவல்துறை டிஎஸ்பி முத்துகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று அறிவுரை வழங்கினர். விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற ரயில்வே காவல்துறை டிஐஜி அபிஷேக் தீக்ஷித் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “மாணவர்கள் ரயில் பயணங்களின்போது, செல்பி எடுப்பது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்துகளில், 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
image
நாம் அனைவரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இங்கு கூடியுள்ளோம். மாணவர்கள் கல்லூரியில் மிகுந்த மகிழ்வோடும், சுதந்திரமாகவும் பயின்று வருகிறார்கள் என்று பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் சிலர் மகிழ்ச்சியாக இருப்பதே குற்றம் செய்வது தான் என்று தவறான எண்ணம் கொண்டு குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அது தவறான ஒன்று. அதை திருத்திக் கொள்ள வேண்டும். வாழ்வில் ஒவ்வொருவரும் இருவகையான அனுபவங்களை கற்று கொள்ளலாம். ஒன்று நாம் வாழ்வில் சுயமாக நமக்கு நடந்ததை கொண்டு அறிந்து கொள்வது. இரண்டாவது மற்றொருவர் மூலம் அவர்களின் அனுபவத்தை அவர்கள் கூறுவதிலிருந்து அறிந்து கொள்வது.
இதையும் படிங்க… “பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்க” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதம்!
புஷ்பா போன்ற திரைப்படங்களில் வரும் கதாபாத்திரத்தை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல், நிஜ வாழ்வில் சாதனை புரிந்த சர்.சி.வி.ராமன் போன்றோரை முன்மாதிரியாக கொண்டு அவ்வாறு நாமும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இந்த கல்லூரி சிறந்த கல்லூரி. அதில் பயிலும் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அது இன்றே உங்களிலிருந்து வர வேண்டும்” என்று ரயில்வே காவல்துறை டிஐஜி அபிஷேக் தீக்ஷித் கூறியுள்ளார்.
image
மேலும், ரயில் விபத்தில் மகனை இழந்த மாணவர்களின் பெற்றோர்கள், கண்ணீர் மல்க பேசி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி வாழ்க்கையை தொடர வேண்டும் என, கலங்கிய படி பேசி கைக்கூப்பி சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.