மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேரோட்டம்: முன் எப்போதும் இல்லாத பாதுகாப்பு

க.சண்முகவடிவேல்

தஞ்சையில் நடைபெற்ற தேர்த் திருவிழா விபத்தை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

தென் கயிலாயம் என்றும் 274 சைவத் திருத்தலங்களுள் பிரசித்திபெற்றதுமான திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சித்திரைத் தேரோட்டம் நமச்சிவாய நம கோஷம் விண்ணதிர வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த திருத்தலம் இது என்பதால் இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகின்றார்.

இப்படி சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வந்தது.

இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினாவதிக்கு அவளது பேறுகாலத்தில் அவளது தாயாக சிவபெருமான் வந்து மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி – அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலி அம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் 6 மணிக்கு மேஷ லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு முன்னே செல்ல, கோயில் யானை லட்சுமியும் செல்ல பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு 2020, 2021 -ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேரோட்ட நிகழ்வு நடைபெறவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வருடம் சித்திரைத் தேர் நடைபெறுவதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஓம் நமச்சிவாய நம கோஷங்கள் விண்ணதிர பெருத்த ஆரவாரத்துடன் கலந்து கொண்டனர்.

தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றிலும் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கின்றது. திருத்தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் ஆணையர் எஸ்.செல்வராஜ், கோயில் இணை ஆணையர் விஜயராணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தஞ்சையில் நடைபெற்ற சப்பரத்திருவிழா விபத்தை கருத்தில் கொண்டு இந்தாண்டு திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டத்தில் வழக்கத்தைவிட மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின்படி 300-க்கும் மேற்பட்ட போலீஸார் டி.சி., முன்னிலையில் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருந்தனர். தேரை சுற்றிலும் போலீசார் ஒரு வளையம் போல் அமைத்து தேரை நகர்த்தி வர ஏற்பாடு செய்திருந்தனர். முதன்முறையாக இந்த தேர்த் திருவிழாவில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.