பெங்களூரு:
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
2013ம் ஆண்டில் மாண்டியா மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரம்யா வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஒரு ஆண்டு மட்டும் எம்.பி.யாக இருந்த நிலையில் அதன்பிறகு 2014-ல் நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் மாண்டியா தொகுதியில் அவர் களமிறங்கினார்.
ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த புட்டராஜூவிடம் இவர் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் தான் காரணம் என அவர் கருதினார். இதையடுத்து அவர் மண்டியா வீட்டை காலி செய்து டெல்லியில் குடியேறினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதில் சில ஆண்டுகள் செயல்பட்ட நிலையில் அவர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி மற்றும் தீவிர அரசியலில் இருந்து ரம்யா விலகி உள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பாட்டீலை மந்திரி அஸ்வத் நாராயண் ரகசியமாக சந்தித்து பேசியதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
இதை 2 பேரும் மறுத்தனர். இந்த விஷயத்தில் எம்.பி.பாட்டீலுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரம்யா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு ஆதரவாகவும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக மறைமுகமாகவும் ட்வீட் செய்துள்ளார் , “அரசியல் தலைவர்கள் பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபடுவது சகஜம். திருமண பந்தத்தால் பல்வேறு கட்சி தலைவர்கள் குடும்ப உறுப்பினர்களாக மாறினர். ஆனால் எம்.பி.பாட்டீல் பற்றி டி.கே.சிவகுமார் கூறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்று கூறியிருந்தார்.
மேலும், “காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ.8 கோடி வாங்கிவிட்டு கட்சியில் இருந்து விலகினேன் என்று செய்திகள் வெளியானது. அது உண்மையில்லை. நான் காங்கிரஸ் கட்சியை ஏமாற்றவில்லை. நான் காங்கிரசின் உண்மை விசுவாசி. என் சொந்தக் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன்.
நான் ரூ.8 கோடியை ஏமாற்றவில்லை. நான் இவ்வளவு நாளாக அமைதியாக இருந்தது எனது தவறு. கட்சியின் முன்னணி தலைவர் வேணுகோபாலை நான் கேட்டு கொள்வது, நீங்கள் கர்நாடகம் வரும்போது, இதுபற்றி விளக்கி கூறுங்கள். என்மீதான இத்தகைய குற்றச்சாட்டை யாரும் நம்ப வேண்டாம்” எனவும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.
இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமாரும், பா.ஜ.க. மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம். கிருஷ்ணாவும் திருமணத்தின் மூலம் உறவினர் ஆகியுள்ளனர். இதை நினைவுகூர்ந்து நடிகை ரம்யா கூறியுள்ளார்.
டி.கே. சிவக்குமாரும், நடிகை ரம்யாவும் ட்விட்டரில் மோதிக்கொண்டதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது பா.ஜ.க. எம்பியை எதிர்த்து நடிகை ரம்யா காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த சிவராமேகவுடாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரசின் உள்கட்சி பிரச்சினை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் உலகிற்கு தெரிந்துள்ளது, தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.