புதுடெல்லி: போலந்து நாட்டின் வார்சாவில் இருந்து தற்காலிகமாக செயல்பட்டு வந்த உக்ரைனின் இந்திய தூதரகம் மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ்-ல் இருந்து செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வார்சாவில் (போலந்து) இருந்து தற்காலிகமாக இயங்கி வந்த உக்ரைனுக்கான இந்திய தூதரகம், மே 17ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்-ல் இருந்து செயல்பட தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகமான போது, உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மருத்துவ மாணவர்கள், இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு அங்கிருந்து வெளியேற்றி தாய் நாடு அழைத்து வந்தது.
உக்ரைனில் இருந்து பெரும்பான்மையான இந்தியர்கள் வெளியேறிய பின்னர், கடந்த மார்ச் 13-ம் தேதி அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் வார்சாவிற்கு மாற்றப்பட்டது.