சின்னத்திரை நடிகை சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தான் கொலை செய்ததாக, புதிய புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டுள்ள சித்ராவின் பெற்றோர் , வழக்கில் இருந்து தப்பிக்கவும் சித்ராவின் சொத்துக்களை அபகரிக்கவும் ஹேம்நாத் பொய்யான தகவல்களை கூறி வருவதாக குற்றச்சாட்டி உள்ளனர்.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியேவந்த சித்ராவின் கணவர் ஹேமநாத் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சித்ராவின் பெற்றோர் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஹேம்நாத் தப்பிக்க இந்த வழக்கை திசை திருப்ப தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், ஏற்கனவே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும், அப்போது சித்ராவின் உடலை காவல்துறையினர் எரிக்க கூறி தங்களை மிரட்டியதாகவும், எனவே மீண்டும் காவல்துறையினர் நியாயமான முறையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் வலியுறுத்தினர்.
ஹேம்நாத் கஞ்சா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், தற்போது தன் மகளைப் பற்றி தவறான தகவல்களை ஹேம்நாத் பரப்பி வருவதாகவும் தெரிவித்த சித்ராவின் தாயார் விஜயா, சித்ரா கழுத்தில் இருந்த காயம், கடித்த தடயம் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு சந்தேகத்தை எழுப்பியதோடு, சித்ரா தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றி இருப்பதாக போலீசாரும் கூறியுள்ள நிலையில், கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு ஹேம்நாத் அடிமையாகி தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாக சித்ராவின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கடந்த ஆட்சியில் உரிய முறையில் காவல்துறை விசாரணை நடத்தவில்லை எனவும் தற்போது இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.