திருப்பூர்: தக்காளி காய்ச்சல் தொடர்பாக தேவையற்ற பயம் மற்றும் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசு சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “இந்தியாவில் தமிழகத்தில் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகளவில் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரியை விஞ்சும் வகையில், இந்த அரசுக் கல்லூரி உள்ளது. கல்லூரிக் கட்டிடம் நிறைவடைந்து பயன்பாட்டில் உள்ளது. ரூ. 341 கோடி மதிப்பில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி கட்டிடங்களை பார்வையிட வந்தேன்.
கூட்ட அரங்கம், நிர்வாக கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனை உட்பட ரூ. 127 கோடி மதிப்பில் நடந்து வரும் பணிகளை பொதுப்பணித் துறையினருடன் இணைந்து பார்வையிட்டேன். அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு எங்கு அமைய உள்ளது என்பதையெல்லாம் பார்வையிட்டோம். வரும் மாதத்தில் பணிகள் முடிக்க வேண்டும் என விரைவுப்படுத்த சொல்லி உள்ளோம்.
ஷவர்மா தடை இல்லை:
தமிழகத்தில் இதுவரை 11.06 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 67 லட்சம் பேர் முதல் முறையாக பயன்பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 93.5 சதவீதம் மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் ஷவர்மாவை தடை செய்யவில்லை. நல்ல நிலையில் உணவுகளை விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷவர்மா உணவுகளை தயாரித்த 2 மணி நேரத்தில் விற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாம்பழங்களை கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கக்கூடாது. இதனை உணவு பாதுகாப்புத்துறை கண்காணித்து வருகிறது. தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.
எலி, பறவைக் காய்ச்சல் போன்று தக்காளி காய்ச்சல் இல்லை. மற்றொரு நுண்கிருமி (வைரஸ்) தான் தக்காளி காய்ச்சல். இதற்கு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கேரள அரசே பதற்றமுள்ள தொற்று இல்லை என தெரிவித்துவிட்டது. இதில் தேவையற்ற பதற்றம், பீதியை ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 6 முதல் 7 லட்சம் புறநோயாளிகள் நாள்தோறும் வருகிறார்கள். சில தவறுகள் கவனத்துக்கு வருகின்றன. அவை சரி செய்யப்பட்டே வருகிறது. 100 படுக்கைக்கு அதிகமான மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் மூலம் தூய்மைப் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் படுக்கை எண்ணிக்கை குறைவான மருத்துவமனைகளில் தூய்மைப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக, அமைச்சர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இது விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து முடித்த மாணவர்கள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையிலோ அல்லது அரசு மருத்துவக் கல்லூரியிலோ அல்லது பொதுசுகாதாரத்துறையிலோ பணியாற்ற வேண்டும். இதற்கான தகுதித்தேர்வு, 2016-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது, சேவை அல்லாத முதுகலைப் பட்டதாரி சிறப்பு தகுதித் தேர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும். மகப்பேறு, மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் எண்ணிக்கையை வைத்து காங்கயத்துக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி, மிக முக்கியத் தேவை. ஏனென்றால் புலம்பெயர் மக்கள் அதிகம் வாழும் திருப்பூரில், மருத்துவக் கல்லூரியில் ஏராளமானோர் பயன்பெறத் தொடங்கி உள்ளனர்.” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
தொடர்ந்து அரசுப் பள்ளியில் பயின்று தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பயிலும் மருத்துவக் கல்லூரி 5 மாணவ, மாணவியருக்கும் கையடக்க கணினியினை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் வினீத், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.