தலைநகர் டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே மூன்று மாடி வணிகக் கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளதால் இந்த இடத்தில் எப்போதும் மக்கள் கூட்ட்ம் நிரம்பி வழியும்.
இன்று மாலையும் இங்குள்ள கடைகளில் வழக்கம் போல் வர்த்தகம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென
தீ விபத்து
ஏற்பட்டது. மாடியின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மூன்று மாடிகளுக்கும் பரவியது. இதனால செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் அங்கும் இங்கும் அலறி அடித்தபடி ஓடினர்.
இருப்பினும் கோராமான இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு பயந்து மூன்று மாடியிலிருந்து கீழே குதி்த்து காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்து்க்கு விரைந்த 20 தீயணைப்பு வாகனங்கள் பல நேரம் போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கொண்டு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் இறந்த சம்பவம் தலைநகர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.