புதுடில்லி–ஜம்மு – காஷ்மீரில் தொகுதிகளை மறுவரையறை செய்ய கமிஷன் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய அரசு, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
எதிர்ப்பு
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, ௨௦௧௯ ஆகஸ்ட் 5ல் ரத்து செய்யப்பட்டது. இதன்பின், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.இதையடுத்து, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் மறுவரையறை செய்ய, தொகுதி மறுவரையறை கமிஷனை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த கமிஷன், தனது அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் காஷ்மீரை சேர்ந்த ஹாஜி அப்துல் கனி கான், டாக்டர் அயூப் மட்டோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.விசாரணைஇந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் கவுல், சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்பட்ட உடனேயே, அதை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை’ என, மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு தொடர்பாக, ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கக் கோரி, மத்திய அரசு, தேர்தல் கமிஷன், ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
‘மக்கள் தொகை மட்டுமே காரணமல்ல’ஜம்மு – காஷ்மீருக்கான தொகுதி மறுவரையறை கமிஷனில், அலுவல் சாரா உறுப்பினராக, தலைமை தேர்தல் கமிஷனர் சுசில் சந்திரா இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், கமிஷன் அறிக்கை பற்றி அவர் நேற்று கூறியதாவது:ஜம்மு – காஷ்மீரில் முன்பு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையில் பல தவறுகள் இருந்தன. அதை சரி செய்துள்ளோம்.
தொகுதி மறுவரையறை செய்வதில், மக்கள் தொகை மட்டு மல்லாமல், அப்பகுதியின் தொடர்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள், நிர்வாக வசதிகள் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவற்றை பரிசீலித்து முடிவு செய்ததால் தான், காஷ்மீரை விட ஜம்முவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.தலைமை தேர்தல் கமிஷனர் சுசில் சந்திரா இன்று பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.