நான் டான் கிடையாது – சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள, டான் படம் இன்று(மே 13) வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி:
சினிமாவின் 'டான்' ஆகிவிட்டீர்களாமே?
ஜாலியாக தான் உதயநிதி என்னை 'டான்' என குறிப்பிட்டார். நான் சினிமாவின் 'டான்' எல்லாம் கிடையாது; நல்ல சூப்பரான நடிகன் ஆனால் போதும்.
சமீபகாலமாக ஆசிரியர்களை மாணவர்கள் அவமதிக்கும் காலக்கட்டத்தில், நீங்கள் படத்தில் ஆசிரியர்களை அவமதிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளீர்களே?
இரண்டு நிமிட 'டிரெய்லரை' வைத்து முடிவு செய்து விடக்கூடாது. இரண்டரை மணி நேர படத்தை பார்த்து விட்டு கேட்கலாம். உண்மையிலேயே ஆசிரியர்களை படத்தில் உயர்வாகவே காட்டியுள்ளோம். முழுபடத்தையும் பார்த்து விட்டால் இந்த கேள்வியே எழாது.
பள்ளி, கல்லுாரி மாணவனாக நடித்த அனுபவம்?
படப்பிடிப்பில் நிஜ மாணவர்களைக் கூட நடிக்க வைத்தனர். இறுதியாண்டு பயின்ற, விடுமுறையில் இருந்த மாணவர்களை பார்த்து வியந்தேன். வேற 'லெவலில்' மாணவர்கள் உள்ளனர். கண்ணாடியில் பார்த்தபோது நான் மாணவனாக தெரிந்தால் மட்டுமே, நம்மால் அந்த பாத்திரத்தில் சரியாக நடிக்க முடியும். இதற்காக சிறிது உடல் எடையையும் குறைத்தேன். எனக்குள் இருந்த 'மிமிக்ரி' கலைஞனை வெளிக் கொணர்ந்தது கல்லுாரி காலம் தான். அந்த காலத்தில் மீண்டும் நடித்தது இனிமையாக இருந்தது.
கதையை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
இந்த கதை தான் என முடிவு செய்து நடிப்பதில்லை. கேட்கும் கதைகளில் உள்ள நல்லதை, அந்த காலத்திற்கு ஏற்றதை தேர்வு செய்கிறேன். தற்போது வித்தியாசமான படங்களை மக்கள் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதுப்புது ஐடியாக்களுடன் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வருகின்றனர். வியாபாரமும் விரிவடைந்துள்ளது.
நீங்கள் படிக்கும் போது என்னவாக ஆக நினைத்தீர்கள்?
சிறுவயதில், அண்ணாமலை ரஜினி போல பால்காரன் ஆகி, தொழிலதிபர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். அதன் பின் அப்பாவை பார்த்து, போலீஸ் ஆக விரும்பினேன். கல்லுாரி காலத்தில், 'மீடியா'வில் வர ஆசைப்பட்டேன். பின் பொறியாளராகவும், கம்பெனி மேனேஜர் ஆக வேண்டும் என, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி விருப்பம் உருவானது.
நாடு முழுவதுக்குமான ஸ்டார் ஆகிவிட்டீர்களா?
நீங்களாக பார்த்து ஆக்கி விட்டால் சரி.
உங்கள் தயாரிப்பில் அடுத்து வரும் படம்?
இப்போதைக்கு எதுவும் இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம்.