புதுடில்லி-வாரணாசி ஞானவாபி மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. மனு தாக்கல்ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், சிங்கார கவுரி அம்மன் கோவிலின் அமைப்பு குறித்து, வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்த, வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், ஐந்து பேர் அடங்கிய குழுவை நியமித்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி, முஸ்லிம் அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் மகேஸ்வரி, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை
முஸ்லிம் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகமதி கூறுகையில், ”ஞானவாபி மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள உத்தரவு, வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம், ௧௯௯௧க்கு எதிரானது. ”அதனால், ஞானவாபி மசூதியில் இப்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட வேண்டும்,” என்றார்.இதற்கு தலைமை நீதிபதி ரமணா, ”இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். ஞானவாபி மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்க கோரும் மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்,” என்றார்.
நீதிபதி குடும்பத்தினர் அச்சம்ஞானவாபி மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, வாரணாசி நீதிமன்ற நீதிபதி ரவிகுமார் திவாகர் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சாதாரண சிவில் வழக்கு, அசாதாரணமான வழக்காக மாற்றப்பட்டு, தேவையில்லாத அச்சம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் வீட்டை விட்டு வெளியே சென்றால், திரும்பி வரும் வரை, என் மனைவி அச்சத்தின் பிடியில் உள்ளார். என் தாயும், மிகவும் கவலையடைந்துள்ளார்’ என்றார்.