இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மாநாட்டில், மாநில அரசின் ஸ்டார்ட் அப் கொள்கையை காணொலி மூலம் அறிமுக படுத்தி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கடுமையாக சாட்டினார்.
சொந்த பந்தம், கொள்கை முடக்கம் மற்றும் மோசடிகளால் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சி முடங்கியதாக பிரதமர் சூசகமாக குறிப்பிட்டார்.
முந்தைய காங்கிரஸ் அரசிடம் தெளிவான கொள்கைகள் இல்லாததால் தொழில் தொடங்குவதில் புதுமையான ஆர்வத்துடன் இருந்த இளைஞர்கள் குழப்பத்தில் ஆழ்ந்ததாக கூறினார். இதனால் ஒரு தலைமுறையின் கனவுகளை முந்தைய காங்கிரஸ் அரசு அழித்து விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
2014ஆம் ஆண்டில் நாட்டில் 300 முதல் 400வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாகவும், 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய இளைஞர்களிடையே புதுமையான உணர்வுக்கு தமது அரசு புத்துயிர் அளித்தது என்றும் அவர் கூறினார்.
யோசனை, புதுமை மற்றும் தொழில் ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தியது, முதலில், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் 70,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இளைஞர்களின் ஆற்றலால் நாட்டின் வளர்ச்சி புதிய வேகத்தைப் பெற்றுள்ளதாகவும்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருப்பதாகவும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.