புதுடெல்லி: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்கு ஒன்றின் விலையை ரூ.949 ஆக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இது வரும் 17ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக சுமார் ₹21,000 கோடி திரட்ட 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்கள் வெளியிடப்பட்டன. பங்கு சந்தை வெளியிட்ட தகவலின்படி 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பங்குகளை வாங்குவதற்கு, 47 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 760 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆரம்பத்தில் ஒரு பங்கை ரூ.902 முதல் ரூ.949 வரை விற்பதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி விற்பனை தொடங்கியது. பொது பங்கு விற்பனை 9ம் தேதி முடிந்தது. முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், ஒரு பங்கின் விலையை ₹949 ஆக ஒன்றிய அரசு நேற்று நிர்ணயித்துள்ளது. இதில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ₹60, எல்ஐசி ஊழியர்களுக்கு ₹45 தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒன்றிய அரசு ₹20,557 கோடி நிதி திரட்டுவது உறுதியாகி உள்ளது. இதற்கு முன்பு 2021ம் ஆண்டில் பேடிஎம் ₹18,300 கோடி, 2010ல் கோல் இந்தியா நிறுவனம் ₹15,500 கோடி, 2008ல் ரிலையன்ஸ் பவர் ₹11,700 கோடி நிதி திரட்டியதே அதிகப்பட்சமாக இருந்து வந்தது.