விழுப்புரம்: மேல்மலையனுார் பெட்ரோல் பங்க்கில், 53 லட்சம் ரூபாய் கையாடல் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் அருள்மொழிவர்மன், 34; இவர், 12 ஆண்டுகளாக மேல்மலையனுாரில் பெட்ரோல் பங்கு நடத்துகிறார்.இந்த பங்க்கில், செஞ்சி தாலுகா சண்டிசாட்சியைச் சேர்ந்த நாகராஜன், 42, என்பவர் 10 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக, 53 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை அவர் கையாடல் செய்தது சமீபத்தில் தெரிய வந்தது.சுருட்டிய பணத்தை கேட்ட அருள்மொழிவர்மனை, நாகராஜன் மற்றும் அவரது தம்பி அறிவழகன், 30, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து, நாகராஜன், அறிவழகன் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நாகராஜனை நேற்று கைது செய்தனர்.
ரூ.400 கோடி மோசடி தம்பதியை பிடிக்க வலை
கோவை: கோவை சுந்தராபுரம் குறிஞ்சி கார்டனில் வசித்தவர் விமல் குமார். அவரது மனைவி ராஜேஸ்வரி. இருவரும், காளப்பட்டியில் கரன்சி வர்த்தகம் செய்யும் ‘ஆல்பா பாரெக்ஸ் மார்க்கெட்ஸ்’ என்ற நிறுவனம் மற்றும் ‘மிஸ்டர் மணி’ என்ற ‘யூடியூப்’ சேனல் நடத்தினர்.தமிழகம் முழுவதும், 8,000 பேர் இவர்களது நிறுவனத்தின் பணம் முதலீடு செய்துள்ளனர். மொத்த பணத்தையும் சுருட்டி, விமல் குமார் தம்பதி தலைமறைவாகி விட்டனர்.’குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்; ஐந்து கோடி ரூபாய்க்கு ‘டிபாசிட்’ சேர்த்தால் இரு சக்கர வாகனம்; ஏழரை கோடி ரூபாய்க்கு டிபாசிட் சேர்த்து கொடுத்தால் கார் தரப்படும்’ என, இந்த தம்பதி ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.அதை நம்பி டிபாசிட் வசூலித்துக் கொடுத்தோர், இப்போது வழக்கில் சிக்கியுள்ளனர். இந்த தம்பதியை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து கடத்தல் ரூ.1.70 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை: விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.71 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, இண்டிகோ விமானம், நேற்று காலை சென்னை வந்தது. அந்த விமானத்தில் இருந்து வெளியே வந்த, சென்னை மண்ணடியை சேர்ந்த தமீம் அன்சாரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஷாஜிதா யாஸ்மின் இருவரின் உடைமைகளையும், சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவர்களது உடைமையில், பழுப்பு நிற பிளாஸ்டிக் பையில், 72.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை பறிமுதல் செய்து மதிப்பிட்டதில், 72.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.60 கிலோ தங்கம் இருந்து தெரிய வந்தது. இருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோல, சர்வதேச விமான முனையத்தின், கழிவறை குப்பைக் கூடையில் பாலிதீன் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள், பையை பரிசோதித்தபோது, 97.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2.11 கிலோ தங்கம் இருந்தது. இதுகுறித்து, சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜெர்மனியில் வேலை: ரூ. 6 லட்சம் ‘அபேஸ்’
கிருஷ்ணகிரி: ஜெர்மனியில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், ஆறு லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டதை போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ‘சிப்காட்’ பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் லாரன்ஸ், 37; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இணையதளம் வாயிலாக அவரை தொடர்பு கொண்ட ஆதித்யா சர்மா, மணிஷ் நாயர் ஆகியோர், ஜெர்மனி நாட்டில் மாதம், 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை உள்ளது என கூறி நம்ப வைத்தனர்.இதற்காக முன்பணமாக, ஆறு லட்சம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். ராபர்ட் லாரன்ஸ் அந்த தொகையை அவர்கள் கூறிய இரு வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.அதன் பின், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த ராபர்ட் லாரன்ஸ், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரிக்கிறார்.
பெங்களூரு ‘ஆசிட்’ குற்றவாளி திருவண்ணாமலையில் கைது
கர்நாடகா மாநிலம் பெங்களூர் சுங்கத்கட்டே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணை அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் 30 என்பவர் ஒரு தலையாக காதலித்தார். அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். கடந்த மாதம் 2ம் தேதி அந்த பெண்ணின் மீது ‘ஆசிட்’ வீசி விட்டு தப்பி சென்றார். அந்த பெண் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பெங்களூர் போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து நாகேசை தேடி வந்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில் சாமியார் வேஷத்தில் நாகேஷ் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு போலீசார் நேற்று காலை காவி உடையில் வந்து அந்த ஆசிரமத்தில் காத்திருந்தனர். மாலை 5:00 மணிக்கு நாகேஷ் தியான மண்டபத்திற்குள் நுழைந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.
தேசிய நிகழ்வுகள்:
ஜம்மு பஸ்சில் தீ: 4 பேர் பலி
ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் பயணியர் பஸ்சில் தீப்பிடித்து நான்கு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஜம்மு – காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள கட்ரா என்ற இடத்தில் இருந்து ஜம்முவுக்கு, நேற்று பயணியர் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பயணியர் பதறியடித்து இறங்கினர். அதிவேகமாக பற்றி எரிந்த தீயில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேருக்கு, கட்ராவிலுள்ள வைஷ்ணவி தேவி கோவில் மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஓடும் பஸ்சில் தீப்பற்றியது எப்படி என்பது பற்றி தடவியவில் நிபுணர்கள் விசாரணை செய்கின்றனர்.
தாதா ஷகீல் கூட்டாளிகள் கைது
மும்பை : மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்து வந்த நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் இருவரை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் கைது செய்தனர். இது பற்றி அதன் அதிகாரிகள் கூறியதாவது: சோட்டா ஷகீலின் கூட்டாளிகளான அரீப் அபுபக்கர் ஷேக் 59, ஷபீர் அபுபக்கர் ஷேக் 51, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மும்பை புறநகர் பகுதிகளில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவ்வாறு கூறினர்.
மாடல் அழகி தற்கொலை
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தன் அறையில் சஹானா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சஹானாவின் தாய், ‘என் மகளை, அவரது கணவர் துன்புறுத்தி வந்தார். அவரால் தான் என் மகள் தற்கொலை செய்திருப்பார்’ என, பரபரப்பு புகார் அளித்தார். இதையடுத்து, சஹானாவின் கணவர் சஜ்ஜத் என்பவரை, போலீசார் காவலில் அழைத்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
4 மாடி கட்டடத்தில் தீ: டில்லியில் 27 பேர் பலி
ஜம்மு – காஷ்மீர் பண்டிட் கொலை
உலக நிகழ்வுகள்:
கடலில் படகு மூழ்கி 11 பேர் உயிரிழப்பு
சான் ஜுவான்: கரீபியன் கடலில் படகு மூழ்கி 11 பேர் உயிரிழந்தனர்.
வட அமெரிக்காவிலிருக்கும் கரீபியன் கடல் பிரதேசத்தில், அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று, நேற்று முன்தினம் ரோந்து சென்றது. அப்போது, பியூர்டோ ரிகோ தீவு அருகே நடுக்கடலில் படகு ஒன்று கவிழ்ந்து பலர் தத்தளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புப் பணிகளை உடனடியாக துவக்கிய அமெரிக்க கடற்படையினர், 20 பெண்கள் உட்பட 31 பேரை மீட்டனர். மேலும், 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள ஹைதி தீவை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.