தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 ஊர்களுக்கு உட்பட்ட 2100 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயருக்கு ஒரே நாளில் பத்திரபதிவு செய்து கொடுத்த பத்திர பதிவு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கு முன்பு வாரிசு இல்லாமல் மரணித்தவரின் நிலத்துக்கு திடீர் வாரிசாக முளைத்தவர்களின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன் பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி. செந்திலாம் பண்ணை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2,100 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த கிரீன் டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து சார்பதிவாளர் மோகன்தாஸ் சட்டவிரோதமாக பதிவு செய்து கொடுத்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் பத்திரத்துடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று சார்பதிவாளர் மோகன்தாசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தாரைவார்த்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை மீண்டும் தங்களுக்கு மறுபதிவு செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 2,100 ஏக்கர் விவசாயிகள் நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக சார் பதிவாளர் மோகன்தாசை தற்காலிக பணிநீக்கம் செய்து துணை பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.
மேலும், முறைகேடு குறித்து மாவட்டப் பதிவாளர் பால்பாண்டி விசாரணை செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை ஏரல் சார்பதிவாளர் வள்ளியம்மாள் கூடுதல் பொறுப்பாக புதுக்கோட்டை சார்பதிவாளராக பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2100 ஏக்கர் நிலமும் 87 வயதான செந்தில் ஆறுமுகம் என்பவரின் 4 தலைமுறைக்கு முந்தையவரான நெல்லைநாயகம் என்பவருக்கு சொந்தமானது என்றும் வாரிசு இல்லாத அவருக்கு பின்னர் அவரது மனைவியின் உறவினர்கள் அவர்களது வாரிசுகள் என இந்த சொத்துக்களை அனுபவித்து வந்ததாகவும்,
காலப்போக்கில் பராமரிக்க ஆள் இல்லாமல் விடப்பட்ட அந்த சொத்துக்களில் இரு கிராமங்கள் உருவாகிப் போனதாகவும், செந்தில் ஆறுமுகம் உச்ச நீதிமன்றம் வரை சென்று தனது குடும்ப சொத்துக்களை மீட்டு உத்தரவு பெற்று வந்துள்ளதாக தெரிவித்த மோகன் தாஸ், அந்த தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் ஆறுமுகத்தால் பவர் வழங்கப்பட்ட கோவையை சேர்ந்த ஆதித்யா கிரீன் டெக் என்ற தனியார் நிறுவனத்துக்கு 2100 ஏக்கர் நிலங்களையும் மொத்தமாக பத்திரபதிவு செய்து கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
அதற்கு ஆதாரமான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல் எங்கே என்று கேட்ட போது சில தினங்களில் கைக்கு வந்து விடும் என்று கூறி சமாளித்தார் மோகன் தாஸ்.
இரு கிராமங்களை முழுமையாக உள்ளடக்கிய இந்த நிலத்தை ஒரே நாளில் ஒரே நபரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுப்பதற்கு, 32 வயது சார்பதிவாளரான மோகன் தாஸ் ஒன்றரை கோடிரூபாய் வரை கையூட்டாக பெற்றுக் கொண்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை 87 வயது செந்தில் ஆறுமுகம் , அவருடன் வந்திருந்த நபர்கள், கோவை ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பின்னணியையும், காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.